இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் – சில உண்மைகள்.
எம்மிடம் 14 நூற்றாண்டு கால அறிவுப் பாரம்பரியம் உள்ளது. நவீன இஸ்லாமிய சிந்தனை மறுமலர்ச்சியின் காலப் பிரிவை விட்டால் 12 நூற்றாண்டு கால அறிவுச் செல்வமொன்று எம்மிடம் உள்ளது. இந்த அறிவுப் பாரம்பரியம் இன்றுவரை எம்மீது செல்வாக்குச் செலுத்துகிறது. ஹிஜ்ரி 2ஆம், 3ஆம் நூற்றாண்டில் தோன்றிய சட்ட சிந்தனைப் போக்கை இன்றுவரை நாம் பின்பற்றுகிறோம். தப்ஸீர், ஹதீஸ் விளக்கவுரை போன்றவற்றைப் பொருத்தவரையிலும் உண்மை இவ்வாறே உள்ளது. பல சந்தர்ப்பங்களில் எமது தொடர்ந்த ஓட்டத்திற்கு இது தடையாகவும் இருக்கிறது. இக்கருத்துப் பின்னணியிலிருந்து பழைய இஸ்லாமிய சிந்தனையை நோக்க முயல்கிறோம்.
அல் குர்ஆன் விளக்கவுரை –தப்ஸீர்- என்ற அறிவுப் பகுதி பல்வேறு பாதிப்புக்குள்ளாகியது. ஆரம்ப காலத்திலேயே “இஸ்ராயீலிய்யாத்” என்ற யூத, கிறிஸ்தவக் கட்டுக் கதைகள் தப்ஸீரில் செல்வாக்கு செலுத்தின. தப்ஸீர் அல் தபரி, தப்ஸீர் இப்னு கஸீர், தப்ஸீர் அல் காஜின் போன்றவற்றில் இதனைக் காண முடியும்.
இஸ்லாத்தின் இடைக்காலப் பிரிவில் நம்பிக்கைப் பிரிவோடு சம்பந்தப்பட்ட பல்வேறு சர்சைகள் எழுந்தன. இவை தப்ஸீரில் கடும் செல்வாக்கு செலுத்தின. கிரேக்க தத்துவங்கள் மொழிபெயர்க்கப்பட்டதோடு அந்த அடிப்படையிலான சிந்தனைப் போக்கு தப்ஸீரை மாத்திரமன்றி இஸ்லாமியக் கலைகள் பலவற்றிலும் செல்வாக்கு செலுத்தியது.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சூபித்துவம் ஏற்படுத்திய செல்வாக்கு மிகப் பாரியது. தப்ஸீரிலும் அது ஒரு பாரிய செல்வாக்கை ஏற்படுத்தியது. சூபித்துவப் பின்னணியிலான தனியான தப்ஸீர்களே உருவாயின. அல் குர்ஆனின் சொற்களுக்கு வெளிப்படையான கருத்து, உள்ளார்ந்த கருத்து (ளாஹிர், பாதின்) என இரு வகை கருத்துக்கள் உள்ளன என்ற கருத்துப் போக்கை தோற்றுவித்தது அக்கலையே. இது இறுதியில் பாதின் என்ற உள்ளார்ந்த கருத்தே அடிப்படையானது என்ற சிந்தனைப் போக்குக்கு இட்டுச் சென்றது. இது குர்ஆன் மர்மங்களும் இரகசியங்களும் நிறைந்த ஒரு நூல் போல் காட்டிவிட்டது.
ஹதீஸ் துறையைப் பொறுத்தவரையில் அத்துறை சார் அடிப்படைச் சர்சைகளே இன்றுவரை முடிந்தபாடில்லை. ஆயிரக்கணக்கான போலி ஹதீஸ்கள் நுழைந்தமை, ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களின் செல்வாக்கு எல்லாம் சேர்ந்து அத்துறை ஆய்வை மிகவும் சிக்கலாக்கிவிட்டுள்ளது. அத்தோடு ஹதீஸ்களை எவ்வாறு நோக்க வேண்டும் அதற்கு இஸ்லாமிய சிந்தனைப் பகுதியில் எத்தரத்தைக் கொடுக்க வேண்டும். அதற்கான விளக்வுரையின் அடிப்படைகள் யாவை என்பன பற்றியும் நிறைய சர்ச்சைகள் இன்றுவரை தொடர்கின்றன. ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி எழுதிய “சட்ட அறிஞர்களுக்கும், ஹதீஸ் துறை அறிஞர்களுக்குமிடையே நபியின் ஸுன்னா” என்ற நூல் இஸ்லாமிய உலகில் ஏற்படுத்திய மிகப் பெரும் அதிர்வை அவதானித்திருப்பின் இந்த நன்கு தெளிவாகும்.
“சட்ட ஆய்வு முறைமை” அல்லது இன்னும் நுணுக்கமாகச் சொன்னால் “இஸ்லாமிய சிந்தனை ஆய்வு முறைமை” என்ற “உஸூல் அல் பிக்ஹ்” கூட கிரேக்க தர்க்கவாத சிந்தனையால் பாதிப்புற்றது. அதனை முழுமையானதொரு ஆய்வு முறைமையாக ஆக்குவதில் இன்றுவரையில் முயற்சிகள் தொடர்கின்றன. இமாம் ஷாதிபி ஆழக் கட்டியெழுப்பிய “மகாஸித் அல் ஷரீஆ” –ஷரீஆவின் உயர் இலக்குகள்- என்ற ஆய்வு அடிப்படை இப்போது மிகுந்த விரிவுபட்ட ஆய்வுகளுக்கு உட்பட்டு வருகிறது.
இஸ்லாமிய சட்டம் என்ற அல் பிக்ஹ் அல் இஸ்லாமியும் நிறையப் பாதிப்புகளுக்கு உட்பட்டது. அந்நியக் கலாச்சாரங்களின் செல்வாக்கு, அக்காலத்தைய சர்வதேச சூழல் தாக்கம், அரபு வழக்குகளின் செல்வாக்கு அனைத்துக்கும் அது உட்பட்டது. பெண்களின் வாழ்வுநிலை முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவு அல்லது ஜிஹாத், அழகியற் கலைகள், அரசியல் பகுதி போன்ற பகுதிகளில் பின்தங்கிய கருத்துக்களை பாரம்பரிய இஸ்லாமிய சட்டப் பகுதிகளில் நிறைய அவதானிக்க முடியும்.
இந்த இஸ்லாமிய சிந்தனைப் பகுதியின் சீர்திருத்தம் மிகவும் மெதுவாகவும், பாரிய சிந்தனா ரீதியான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இஸ்லாமிய உலகில் நடந்து வருகிறது. அரபுப் புரட்சியைத் தொடர்ந்த அன்மைக் காலப்பிரிவிலேயே இந்த சிந்தனை சீர்திருத்தம் பற்றிய வேலைத்திட்டங்கள் ஓரளவு வேகம் பெற்றுள்ளன.
இஸ்லாமிய உலகில் எதிரும் புதிருமான பல சிந்தனைப் பிரிவுகள் காணப்படுகின்றமைக்கும்“அல் காயிதா, ISIS போன்ற ஆயுதப் பிரிவுகள் தோன்றியமைக்கும் இந்த அறிவுப் பாரம்பரியமே முதல் காரணம். முன்னைய கட்டுரையொன்றில் நாம் குறிப்பிட்டது போல் கோட்பாடுகளின் புனிதத்துவமும் –ஆளுமைகள் மனிதப் பலவீனங்களோடு கூடியவை என்ற கருத்துக்குமிடையே சமநிலை காண முடியாமல் போனமையும், அறிவுச் செல்வாக்குமிக்க நவீன கால மேற்குலகுடனான கடும் மோதலும் இதற்கு அடிப்படைக் காரணம்.
மேற்குலகு இஸ்லாமிய உலகு மீது செலுத்தும் அரசியல் செல்வாக்கு, பாரிய சுரண்டல், அது செய்யும் பயங்கர அநியாயங்கள் என்பவை மேற்கத்திய உலகுடனான ஒரு சுமுக அறிவுக் கலந்துரையாடலுக்கு இஸ்லாமிய உலகைச் செல்லவிட வில்லை. மேற்கத்திய உலகிலிருந்து வரும் அனைத்தையும் சந்தேகத்தோடும் எதிர்ப்புணர்வோடும் பார்க்க வைக்கும் நிலையையே இது தோற்றுவித்துள்ளது.
மேற்கத்தைய சூழ்ச்சி, “யஹூதி, நஸாராக்களின் சதி” என்பது முஸ்லிம் மனதத்துவத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு மிக முக்கிய அம்சமாகும். கிரிகட் என்ற விலையாட்டிலிருந்து, உணவுப் பொருட்கள், அழகியல் கலைகளின் வளர்ச்சி, தொழில் நுட்ப சாதனங்கள், செருப்பு, உடை போன்றவை வரை அனைத்திலும் யூத, நஸாராக்களின் சூழ்ச்சி ஒளிந்துள்ளதோ எனப் பார்க்கும் மனோநிலை பொது மக்கள் வரையில் உள்ளது.
இந்தப் பின்னணியில் இஸலாமிய உலகமே ஒரு குழப்ப நிலையில் உள்ளமையை அவதானிக்க முடியும். பல நாடுகளில் முஸ்லிம் சிறுபான்மைகளும் மிகுந்த சிரமங்களுடனும், அபாயங்களுக்கு மத்தியிலும் வாழ்கிறார்கள்.
இந்நிலைகள் அனைத்துக்குமான முதல் தீர்வு இந்த சிந்தனைச் சிக்கலிலிருந்து விடுபடுவதேயாகும்.