இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஓட்டம் எங்கே!

Sithy Lebbe

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஓட்டம் எங்கே!
இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் ஐரோப்பியர் வருகைக்கு முந்திய காலப்பிரிவு முஸ்லிம்களது செல்வாக்கைக் காட்டுவதாகக் காணப்படுகிறது.

ஐரோப்பியர் வருகை முஸ்லிம்களைப் பின்தங்கச் செய்தது. பொருளாதார ரீதியாக அவர்கள் பாதிக்கப் பட்டார்கள். கல்வியிலும் பின்தங்கினார்கள்.

போர்த்துக்கேயரால் மிக மோசமாகத் தாக்கப்பட்ட முஸ்லிம்கள் கண்டி செனரத் மன்னனிடம் வந்து சேர்ந்த போது அவர்களில் 4000 பேரை அவர் கிழக்கு மாகாணத்தில் குடியேற்றினார் என வரலாறு கூறும் போது, வரலாறு கூறாது விட்ட பல பகுதிகள் உள்ளன.

முஸ்லிம்கள் மேற்குக் கரையோரமாக மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தனர். போர்த்துக்கேயர்கள் வந்திராவிட்டால் முஸ்லிம்களின் கையில் இலங்கையின் ஆட்சி சென்றிருக்கும் என்றளவுக்கு அவர்களது செல்வாக்கிருந்தது என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.

எனவே போர்த்துக்கேயர்கள் செய்த அழிவு மிகப் பாரியதாக இருந்திருக்கும். பல கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்களையும், நிறைய வாழ்விடங்களையும் அவர்கள் இழந்திருப்பர். இது பற்றி தனியான புள்ளி விபரங்களோடு கூடிய தகவல்கள் எதனையும் வரலாறு தரவில்லை.

கண்டிக்கு ஓடிவந்த முஸ்லிம்கள் ஏறத்தாழ அகதிகளாகவே வந்து சேர்ந்திருப்பர். மீண்டும் சைபரிலிருந்து அவர்கள் தமது வாழ்வைத் தொடர்ந்திருக்க வேண்டும். தமது பாரம்பரிய அனுபவமிக்க தொழிலைவிட்டு அவர்கள் விவசாயத்தில் படிப்படியாக செழிக்க முற்பட்டிருக்க வேண்டும்.

முஸ்லிம்களது வீழ்ச்சிக்கு போர்த்துக்கேயர் வந்தது மாத்திரமன்றி படிப்படியாக இஸ்லாமிய சாம்ராஜ்யமும் உலகளாவிய ரீதியில் வீழ்ந்து வந்தமையும் ஒரு காரணம்; ஒரு பிரதான காரணம் என்பதில் சந்தேகமில்லை.

பின்னர் முஸ்லிம்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் போதே ஒடும் உலகை விட்டு வெகுதூரம் பின்தங்கியுள்ளோம் என்பதை புரிந்து கொண்டார்கள்.

இந்நிலையில் 19ம் நூற்றாண்டின் இறுதி காலப் பிரிவுகளிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பிரிவுகளிலும் ஒரு மறுமலர்ச்சி தோற்றம் பெற்றது. சித்தி லெப்பை, ஐ.எல்.எம்.ஏ. அஸீஸ், கலாநிதி புர்ஹானுத்தீன் ஜாயா, வாப்பூச்சி மரிக்கார் போன்றோர் இந்த மறுமலர்ச்சியை ஆரம்பித்து வழி நடாத்தியவர்களாவர்.

இதே காலப் பிரிவு இஸ்லாமிய உலகை நோக்கினால் அங்கு சுதந்திரப் போராட்டங்களைக் காண்கிறோம். இஸ்லாமிய சிந்தனைக்கும், மேற்கத்திய சிந்தனைக்குமிடையிலான பெரும் போராட்டமொன்றையும் காண்கிறோம்.

ஆனால் சித்திலெப்பை போன்றவர்கள் மேற்கத்திய சிந்தனையோடு கோட்பாட்டு, தத்துவ போராட்டமொன்றைக் கொண்டு செல்லவில்லை. சிறுபான்மையின் வேலைத்திட்டம் அதுவாக இருக்க முடியாது எனக் கண்டார்கள்.

இந்தப் பின்னணியில் ஆங்கில, மேற்கத்திய கல்வியைப் புறக்கணிப்பது பொருத்தமல்ல எனக் கண்டார்கள். எனவே ஒரு இஸ்லாமிய சூழலில் மேற்கத்திய கல்வி முறையை நடை முறைப்படுத்தினார்கள். முஸ்லிம் சமூகம் ஆங்கில அரசியல் ஒழுங்கின் உள்ளே இருந்து கொண்டே அரசியல் ரீதியாகப் போராடித் தமது உரிமைகளைப் பெற்றும் கொள்ள வேண்டும் எனக் கருதினார்கள்.

பின்னர் ஐம்பது, அறுபதுகள் காலப் பிரிவுகளில் இலங்கைக்கு இஸ்லாமிய உலகில் நடந்து கொண்டிருந்த கோட்பாட்டு, தத்துவப் போராட்டப் பின்னணியிலிருந்து இஸ்லாமிய இயக்கங்கள் வந்தன.

சித்திலெப்பை போன்றோரின் தலைமைத்துவம், அவர்களது வேலைத்திட்டம், போக்கு, தலை முறை, தலை முறையாகத் தொடரவில்லை. இஸ்லாமிய இயக்கங்களின் செல்வாக்கும் பாரம்பரிய மார்க்க ரீதியான தலைமைகளின் செல்வாக்கும் வளர்ந்து இடம் பிடித்தன.

இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஓட்டம் சித்தி லெப்பை போன்றோர் இட்ட திசையைவிட்டு மாறியது எனக் கூறலாம்.

அது ஆழ்ந்தும், நுணுக்கமாகவும் பார்த்தால் இலங்கை முஸ்லிம்களுக்கு நஷ்டமாகவே அமைந்து விட்டது எனக் கூறலாம்.

இங்கு நாம் துவங்கி வைத்தது ஒரு சர்ச்சைக்குரிய வாதமே.
நீங்களும் இது பற்றிக் கருத்துக்களை முன்வைக்கலாம்.

Reply