சமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்
நவீன இஸ்லாமிய சிந்தனை குறித்த ஒரு விளக்கம் இது. “நவீன” என்ற பிரயோகம் சிலரைப் பொறுத்த வரையில் சற்று மனச் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு. எனவே அத்தகைய மனத் தடைகளை அகற்ற அதற்கு நாம் சமகால சிந்தனை என்போம். இப்போது பதப் பிரயோகத்தை விட்டு விட்டு விடயத்திற்கு வருவோம்.
இங்கு “சிந்தனை” என்ற பிரயோகத்தின் பொருள் இஸ்லாத்தை மதம் என்ற நிலையிலிருந்து அப்புறப்படுத்தி அதனை ஒரு கோட்பாடாகவும், கொள்கையாகவும் முன்வைத்தல் என்பதாகும். அத்தோடு அந்த அறிவு முயற்சியை மேற்கொள்ள அல்குர்ஆனையும், சுன்னாவையும் அணுகுவதற்கான ஒரு ஆய்வு முறைமையைக் கொண்டிருத்தலுமாகும். பல்வேறு தர வேறுபாடுகளோடு சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்கள் அனைவரும் இந்தக் கருத்தினுள்ளே வருவார்கள். எனினும் சிலர் இஸ்லாத்திற்கான அறிவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் மேற்சொன்ன பண்பு இன்மையால் இந்த வட்டத்தினுள்ளே வர மாட்டார்கள். இக் கருத்தை மிகவும் விரிவாக விளக்குவதைத் தவிர்த்து ஒரு கருத்தை மட்டும் முன்வைக்கிறேன். “சிந்தனை” என்ற இப் பிரயோகத்திற்கான இப் பொருளைப் புரிந்து கொள்ளாத போது சமகால இஸ்லாமிய சிந்தனையின் ஆன்மாவையோ, அதன் சிந்தனைப் போராட்டத் தளங்களையோ புரிந்து கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல அத்தகையவர்களால் இஸ்லாமிய சிந்தனைக்கான சிறந்த அறிவுப் போராளிகளாகவும் இருக்க முடியாது.
தொடர்ந்து சமகால இஸ்லாமிய சிந்தனைக்கான அறிவுப் பங்களிப்பு பற்றி சுருக்கமாக நோக்குவோம். இமாம் ஹஸன் அல் பன்னா, மௌலானா அபுல் அஃலா மௌதூதி, ஸையத் குதுப், ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி, ஷெய்க் முஸ்தபா ஸிபாயி, ஷெய்க் அப்துல் கரீம் ஜைதான், உஸ்தாத் முஹம்மத் அஹ்மத் அல் ராஷித், ஷெய்க் அபுல் ஹஸன் நத்வி போன்றோர் சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒரு வகை சார்ந்தவர்களாவர்.
இவர்களது தனித்துவம் ஏற்கனவே கூறியது போல் இஸ்லாத்தை ஓர் கோட்பாடாகவும், கொள்கையாகவும் வடிந்தெடுத்ததோடு அதனை சமூகமயப்படுத்துவதில் வெற்றி கண்டமையிலேயே உள்ளது. இந்த வகையில் இவர்கள் மேற்கத்தியப் பாணியிலான கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொண்டிருந்த பெருந் தொகையான இளைஞர்களையும், அதற்கு வெளியே இருந்த பொதுமக்களையும், சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களில் தொழில் புரிந்து கொண்டிருந்தோரையும் ஈர்ந்தெடுத்து இஸ்லாமிய சிந்தனைக்கான ஒரு பாரிய சக்தியாக மாற்றியமைப்பதில் வெற்றி கண்டார்கள். மேற்கத்திய மயப்படுத்துவதில் தீவிர ஈடுபாடு காட்டி வந்த முஸ்லிம் நாட்டு அரசுகளுக்கு எதிரான பாரிய அரசியல் போராட்டமொன்றை கட்டியெழுப்பியதும் இவர்கள் அத் தொடரிலான பணியாகும்.
இந்தப் பின்னணியில் இவர்களது நூல்கள் பிரச்சார – தஃவா – நூல்கள். அவர்களது பணி பிரதானமாக, முதன்மையாக பிரச்சாரம், ஆழ்ந்த அறிவுப் பணி – Academic work – அல்ல. ஆயினும் இந்த அனைத்து அறிஞர்களின் நூல்களின் சில ஆழ்ந்த ஆய்வு. ஒரு Academic work என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறே மிகப் பாரிய வாசிப்புப் பின்னணியின் காரணமாக இவ்வறிஞர்கள் மிகப் பெரியதொரு அறிவுப் பங்களிப்பையும் செய்துள்ளார்கள் என்பதும் தெளிவு : எனினும் அவர்களது பணியை பாரியதொரு மீள் வாசிப்புக்குட்படுத்தும் போதே இந்த உண்மையைக் கண்டு கொள்ள முடியும். ஆயினும் இந்த அறிஞர்களைப் பொறுத்தவரையில் அவர்களது பணி பற்றிய அடிப்படை மதிப்பீடு இவ்வாறுதான் அமைய வேண்டும் என நான் கருதுகிறேன். இந்தப் பின்னணியிலேயே ஆழ்ந்த அறிவு அடித்தளமின்றி இத்தகைய பிரச்சார அறிவுசார் நூல்கள் மீது மட்டும் அமைந்திருந்தமையே அரபு வசந்தத்தின் பின்னடைவுக்கும், தடுமாற்றத்திற்கும் காரணமென்பது இப்போது உணரப்பட்டு வரும் உண்மையாகும்.
அல்லாமா இக்பால், மாலிக் பின் நபி, அலி இஸ்ஸத் பிகோபிச், கலாநிதி ஹமீதுல்லா, அப்துல்லா தர்ராஜ், முஹம்மத் அப்துஹு, இமாம் ரஷீத் ரிளா போன்றோர் இன்னொரு வகை வித்தியாசமான சிந்தனையாளர்கள். இவர்கள் இஸ்லாமிய பாரம்பரிய சிந்தனை பற்றிய அறிவும், மேற்கத்திய சிந்தனை குறித்த ஆழ்ந்த அறிவும் அவற்றை ஒப்பிட்டு நோக்கும் தகைமையும் கொண்டு தமது ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். இவை மிகவும் கனதித் தன்மையும், சாதாரண வாசகனால் எட்ட முடியாத தரமும் கொண்டவை.
இஸ்லாம் ஆழ வளரும் நிலை தடுக்கப்பட்டு கிடையாகி மிக வேகமாக படர்ந்து வளர்ந்து சென்றமையால் அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் பரவிக் காணப்படும் அரசியல், பொருளாதார சமூக சிந்தனைகளும், விழுமியங்களும் வளராது கருவறையிலேயே நின்று விட்டன என அல்லாமா இக்பால் சொல்லும் போதும் அல்லது வரலாற்றில் நாம் காணும் இஸ்லாமிய நாகரீகம் என்பது அல்குர்ஆன் கட்டியெழுப்ப முனைந்த நாகரீகத்தின் உருக்குலைந்த தோற்றமே என மாலிக் பின் நபி கூறும் போதும் இஸ்லாமிய வரலாற்று ஓட்டத்தின் அடிப்படைத் தவறை அவர்கள் சுட்டிக் காட்டுவதோடு முஸ்லிம் சமூக வீழ்ச்சி நிலைக்கான தீர்வும் அங்கிருந்தே தோன்ற வேண்டும் என்கிறார்கள். இங்கே இப் பகுதியின் சிந்தனையாளர்கள் விளக்கியவற்றையெல்லாம் நான் கொண்டுவரவில்லை. எம் முன்னால் உள்ள இன்னொரு சமகால சிந்தனைப் போக்கை சுட்டிக் காட்டுவதும் அந்த சிந்தனைகள் அரபு வசந்தத்தின் பின்னர் களத்திற்கு மீண்டும் வந்துள்ளன என்பதை உணர்த்துவதுமே எனது நோக்கம்.
சமகால இஸ்லாமிய சிந்தனையின் இன்னொரு பக்கம் இஸ்லாமிய சட்ட ஆய்வுகளாகும். அங்கும் பல பாரிய ஆய்வுகளைக் காணக் கூடியதாக உள்ளது. இமாம் அபூ ஜஹ்ரா, கலாநிதி முஸ்தபா அஹ்மத் ஜர்காஉ, அல்லாமா ஷல்தூத், இமாம் ரஷீத் ரிளா, முஸ்தபா முராகி இப்படி நிறையப் பேரை அங்கு நாம் காண்கிறோம். இமாம் அபூ ஜஹ்ரா இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பிரதான மத்ஹபுகளின் இமாம்களை ஆராய்கிறார். அவர்களது வாழ்வு, வாழ்ந்த சமூக, அரசியல் பின்புலம், அவர்களது சிந்தனை, அவர்களது சட்ட ஆய்வு முறைமை, பின்னால் அவர்களது அமைத்த சட்ட சிந்தனை முறைமைகளின் வளர்ச்சி என்ற ஒரு முழுமையான ஆய்வாக அது அமைகிறது. இமாம்களான அபூஹனீபா, மாலிக், ஷாபியீ, அஹ்மத் என்பவர்களோடு இமாம் ஜைத் , ஜௌபர் சாதிக், இமாம் இப்னு ஹஜ்ம், இமாம் இப்னு தைமியா என்ற அனைவரையும் அவர் ஆராய்கிறார். அந்த ஆய்வுகள் விமர்சனக் கண்ணோட்டத்தில் அமைந்து இஸ்லாமிய சட்டம் பற்றியதொரு மிக ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கிறது.
முஸ்தபா அஹ்மத் அல் ஜர்காவின் இஸ்லாமிய சட்டம் பற்றிய நூல்களில் மிகவும் பிரதானமான “அல் மத்கல் அல் பிக்ஹி அல் ஆம்” என்பதாகும். அந் நூலில் அவர் இஸ்லாமிய சட்டக் கோட்பாடுகளை ஆக்குவதில் கவனம் செலுத்தியுள்ளார். அது மிகப் பெரியதொரு அறிவுப் பணியாகும். இவ்வாறான கோட்பாட்டுப் பின்னணியிலான ஆய்வுகளோடு இஸ்லாமிய சட்டத்தை சமகால வாழ்வில் பிரயோகிக்கும் பணியும் பாரியளவு நடந்துள்ளது. அப் பகுதியில் பங்கு கொண்ட பலரோடு அவர்களிள் முன்னணியில் திகழும் ஒருவர் ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி அவர்களாவர். அவரது நூல்களில் அல் ஹலால் வல் ஹறாமும், பிக்ஹ் அஸ் ஸகாதும் உன்னதமான அறிவுப் பணியாகும். கர்ளாவியினதும் இன்னும் பலரது சட்டப் பகுதியிலான ஆக்கங்கள், சிக்கல்களும், பிரச்சினைகளும் நிறைந்த இக் காலப் பிரிவிலும் கூட இஸ்லாத்தை வாழும் கொள்கையாகக் காட்டுவதில் பெரும் பங்களிப்பு செய்கின்றன.
ஹதீஸ் துறைப் பங்களிப்பு சமகால இஸ்லாமிய சிந்தனையின் இன்னொரு பகுதியாகும். அஹ்மத் முஹம்மத் ராஷித், நாஸிருத்தீன் அல்பானி, ஷுஐப் அல் நாஊத், இப்னு பாஜ் இப்னு உஸைமின், முஸ்தபா அல் அஃலமி போன்ற பலரும் ஹதீஸ்கள் மீளாய்வு, அவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றுக்கான விளக்கவுரை எழுதல் என்ற பகுதியில் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்.
அல்குர்ஆனிய ஆய்வுகள் நவீன காலப் பிரிவில் புதிய வடிவை எடுத்துள்ளன. மிகப் பெரிய வெற்றிகளையும் கண்டுள்ளன. முஹம்மத் அப்துஹுவும், ரஷீத் ரிளாவும் துவங்கி வைத்த இப் பணி அப்துல்லா தஃராஜ், ஸையத் குதுப், மௌதூதி, ஷெய்க் கஸ்ஸாலி, ஆயிஷா அப்துர் ரஹ்மான் என நீண்டு சென்றது. இப்போதும் பல வடிவங்களில் தொடர்கிறது.
இறுதியாக சமகால இஸ்லாமிய சிந்தனை நான்கு பகுதிகளைப் பிரதானமாகக் கொண்டு வளர்வதை அடையாளம காட்ட முடிகிறது.
(1) சட்டப் பகுதி : இது வரை நடந்து வரும் இஜ்திஹாத் என்பது நடைமுறை யதார்த்தத்தை மதிப்பீடு செய்து இசைவாக்கமடையச் செய்தல் என்ற போக்கைக் கொண்டிருந்தது. இனி அது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். அதுவே மாற்று இஜ்திஹாத், பிரதியீட்டு ஆய்வு நிலை என அறிஞர்கள் கூறி வருகிறார்கள். ஷரீஆவின் இலக்குகள் என்ற மகாஸித், இஸ்லாமிய ஒழுக்கக் கோட்பாடு என்ற அடிப்படைகள் மீது இதனை அவர்கள் எழுப்ப முனைகிறார்கள். வெறும் கிளைச் சட்டங்கள் மட்டுமல்ல. சமூகவியல் கலைகளையும் இந்த அணுகுமுறை மூலம் மீள் கட்டியெழுப்ப இந்த அறிஞர்கள் முனைகிறார்கள். “இஸ்லாமிய சட்டம் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கான ஆய்வுகள் மத்திய நிலையமும்,” “இஸ்லாமிய சிந்தனைகளுக்கான சர்வதேச நிறுவனமும்” இப்பணியை முன்னெடுக்கும் பிரதான நிறுவனங்களாகும். அஹ்மத் ரைஸுனி, ஜாஸிர் அவ்தா, முக்தார் அல் ஷின்கீதி போன்ற பல அறிஞர்களும் இப் பணியில் முன்னணிப் பங்கு வகிக்கிறார்கள்.
(2) ஹதீஸ்களின் ஸனத் ஆய்வுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் அதன் மதன் – மூல உரை – ஆய்வுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. “சட்ட நிபுணர்களுக்கும், ஹதீஸ் துறை நிபுணர்களுக்குமிடையே நபியின் ஸுன்னா” என்ற ஷெய்க் கஸ்ஸாலியின் பாரிய அதிர்வை ஏற்படுத்திய நூலிலிருந்து ஆரம்பித்த இந்த சிந்தனை ஆழ்ந்த வாதப் பிரதிவாதமாகத் தொடர்கிறது.
(3) இஸ்லாமிய உலகுக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்கான வாழ்வொழுங்கு பற்றிய ஆய்வுகள் துவங்கி வளர்கின்றன. தனி நபர்கள், நிறுவனங்கள் என இந்த ஆய்வு தனியான ஒரு பகுதியாக வளர்ந்து வருகிறது.
(4) பாரம்பரிய இஸ்லாமிய அறிவு எவ்வாறு விமர்சனத்திற்குட்படுத்தப்பட வேண்டும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற அம்சம் மேற்சொன்ன மூன்று அம்சங்களின் பின்னணியில் எழுந்து வருகிறது. பாரம்பரிய இஸ்லாமிய அறிவின் ஒரு பகுதி நவீன முஸ்லிமின் அறிவிற்கு விலங்கிடுகிறது; அவனை அழுத்துப் பாரமாகவும், சுமையாகவும் உள்ளது என்ற வாதம் ஒரு புறம் முன்வைக்கப்பட, அவை மனித அறிவின் முடிவுகள், அவனது அனுபவ சேர்க்கைகள். எனவே அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முறைமையொன்று வகுக்கப்பட வேண்டும் என்ற இன்னொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இவற்றிற்கிடையே சமநிலை காண்பதே பொருத்தமான முடிவாகும் என்ற வாதங்களும் எழுகின்றன.
இவ்வாறு நவீன – சமகால – இஸ்லாமிய சிந்தனை என்பது ஒரு பரந்த – விரிந்த – ஆழ்ந்த அறிவுச் சொத்து. கட்டாயமாக இந்த அறிவுப் பகுதியில் புகுந்து ஆய்ந்து எமக்கான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதே எமது இப்போதைய வரலாற்றுத் தேவையாகும்.