முஸ்லிம் தனியார் சட்டம் – இரு திருத்த நகல்கள்
முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிய சர்ச்சையில் நாம் மூழ்கி வருகிறோம். அரசிடம் இரு திருத்த நகல்கள் சில வேறுபாடுகளோடு கொடுக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
நிலைமை இவ்வாறிருந்த போதும் உண்மையில் இதில் சர்ச்சைப்படுவதற்கோ, குழப்பிக் கொள்வதற்கோ எதுவுமில்லை.
ஏனெனில் ஜமிய்யதுல் உலமாவின் தனியார் சட்டத் திருத்த நகலும் சரி, சலீம் மர்சூப் தலைமையிலான குழு சமர்பித்த தனியார் சட்டத் திருத்த நகலும் சரி இஸ்லாமிய ஷரீஆவுக்கு உட்பட்டவையேயாகும்.
இந்த வகையில் எந்த சட்டத்திருத்த நகல் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் பிரச்சினைப்படுவதற்கு அங்கு எதுவுமே இல்லை.
எனவே முஸ்லிம் புத்த ஜீவிகளோ, பொதுமக்களோ உணர்ச்சிபூர்வ நிலைக்கு உட்பட்டு அடுத்த சாராரை சாடுவது அல்லது அடுத்த சாரார் இஸ்லாமிய ஷரீஆவுக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் காட்ட முனைவது மிகப் பெரிய தவறாகும். இது சமூகத்தில் பிளவுகளையும், மோதல்களையும் ஏற்படுத்திவிடும் அபாயமிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இப் பகுதியில் ஜம்இய்யதுல் உலமாவே மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களே நமக்கு மாற்றமான அடுத்த கருத்தை மதிக்கும் பண்பாடுடையவர்கள். அவ்வாறு மதிக்க வேண்டும் எனவும் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் எனவும் அவர்களே சமூகத்திற்கும் போதிக்கிறார்கள்.
இது இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்பாஸியர்கள், உஸ்மானியர்கள் காலப்பிரிவில் ஹனபீ மத்ஹபே ஆட்சி. மத்ஹபாக அங்கீகாரம் பெற்றது. இஸ்லாமிய ஸ்பெயினில் மாலிகி மத்ஹப் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் அடுத்த மத்ஹபினர் யாரும் ஷரீஆவுக்கு அது முரணானது என்ற கோஷத்தை எழுப்பவில்லை. அவ்வாறே உஸ்மானியர்களின் பிற்காலப் பிரிவில் தனியார் சட்டப் பகுதியிலும் ஏனைய சட்டப் பகுதிகளிலும் சில திருத்தங்கள் அறிஞர்களது ஆய்வூடாக கொண்டு வரப்பட்டன. அவை ஹனபீ மத்ஹபுக்கு வெளியில் சென்று பெறப்பட்ட கருத்துகளாகவும் அமைந்தன. இந்த நிலைகளின் போது எந்த மோதல்களும் உருவாகவில்லை.
இந்தக் கண்ணோட்டத்திலேயே முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த நகல்கள் இரண்டையும் நாம் நோக்க வேண்டும். இஸ்லாமிய ஷரீஆவுக்கு எதிரான செயற்பாடு என ஒரு பிரிவினரை நாம் ஒரு போதும் காணக் கூடாது.
இவ்விரு நகல்களுமே இஸ்லாமிய ஆதராங்களின் பின்னணியிலேயே தயாரிக்கப்பட்டன. எனவே இவற்றில் எதனைத் தெரிவு செய்வது என்பதைக் கீழ்வரும் இரு அடிப்படைகளின் ஊடாகவே நாம் நோக்க வேண்டும் :
- தற்போதைய சமூக யதார்த்தப் பின்னணியில் ஒரு சிறந்த ஸ்திரமான குடும்ப நலனுக்கு எந்த சட்ட நகல் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என நோக்கல்.
- நாம் சிறுபான்மையினர். அடுத்த சமூகத்தினர் இஸ்லாத்தைப் பிழையாகப் புரிந்து, இஸ்லாத்தை விட்டுத் தூரமாக நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும் போது எந்தத் திருத்த நகல் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என நோக்கல்.
இவ்வாறு நோக்காது சலீம் மர்சூபின் திருத்த நகல் ஷரீஆவுக்கு முரண் என்பவர்கள் அது எவ்வாறு முரண்படுகிறது என்பதை ஆதாரத்தோடு முன்வைக்காது மிகப் பொதுவாக சமூகத் தளத்தில் கருத்து முன்வைப்பது பெரும் தவறாகும்.
வயது 18 ஆக அமைய வேண்டும் என்பது ஷரீஆவுக்கு முரணா?
தலாக் சொல்பவர்கள் மதாஉ கொடுக்க வேண்டும் என்பது ஷரீஆவுக்கு முரணா?
அவ்வாறே ஜம்இய்யதுல் உலமாவின் நகலோடு ஒத்துச் செல்பவர்கள் எந்தப் பகுதியில் ஏன் உடன்படுகிறார்கள் எனவும் விளக்குதல் மிகவும் பொருத்தமாக அமையும்.
மிகவும் பொத்தாம் பொதுவாக மார்கக் விரோதி, மகாஸிதுஷ் ஷரீஆவை சிதைப்பவர்கள் என்பது பெரும் தவறு.
தயவு செய்து நாம் அறிவுபூர்வமாகக் பேசுவோம். உணர்ச்சி பூர்வமாகப் பேசுவதையும் ஒரு பக்கத்தைச் சாடுவதையும் தவிர்ப்போம்.