முஸ்லிம் அரசியல் நிலை

முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலான இன்றைய உள்ளூராட்சித் தேர்தலை அவதானிக்கும் போது எந்தத் தேசிய தலைமையும் இன்றி பல்வேறு கட்சிகளின் உள்ளே முஸ்லிம் சமூகம் மிக மோசமாகச் சிதறிப் போய் நிற்பது கவனத்தில் கொள்ளத்தக்க விடயமாகும்.

1980க்கு முன்னால் முஸ்லிம்கள் தேசிய அரசியலின் உள்ளே அரசியல் தலைமைகளை பெற்றிருந்தனர். கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், ஏ.ஸி.எஸ் ஹமீத் போன்றோர் அன்றைய முக்கிய தேசியத் தலைமைகளாக மிளிர்ந்தனர்.

1980 செப்டம்பர் 21ம் திகதி காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முஸ்லிம் அரசியலில் வித்தியாசமானதொரு போக்கு ஆரம்பமாகியது. படிப்படியாக முஸ்லிம் சமூகத்தில் அக் கட்சி செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. 1988 பெப்ரவரி 11ம் திகதி அது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு 1989ம் ஆண்டையப் பொதுத் தேர்தலில் மொத்தமாக 202, 016 வாக்குகளைப் பெற்று நான்கு பேர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர். சமூக அங்கீகாரத்தையும் பெற்றது. இதன் மூலம் முஸ்லிம் காஹ்கிரஸ் என்ற புதிய அரசியல் சக்தி முஸ்லிம் சமூக அரசியலில் ஓரளவு காலூன்றி நின்றது.

தனிக் கட்சி அரசியல் என்பது முஸ்லிம்களுக்கான ஒரு சரியான அரசியல் போக்கா என்பது திடமாக வேறுன்றி கொள்கை ரீதியான நியாயங்கள் கற்பிக்கப் பட முன்னரே 2000ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் தலைவர் அகால மரணமடைந்தார். அஷ்ரப் தனது இறுதி காலப் பிரிவில் ‘நுஆ’ என்ற தனித்துவ அரசியலில் இருந்து விலகிய கட்சியை ஆரம்பித்தமையை நோக்கும் போது தனித்துவ அரசியல் பற்றிய தடுமாற்றம் அவருக்கும் இருந்ததுவோ என சிந்திக்கத் தோன்றுகிறது.

அஷ்ரபின் மரணத்தை அடுத்து அவரமைத்த கட்சியில் பல்வேறு பிளவுகள் தோன்றின. அத்தோடு 2009 மேயில் தமிழீழப் போராட்டம் தோல்வியடைந்ததையடுத்து தனித்துவக் கட்சி என்ற கருத்து செல்வாக்கிழக்கத் துவங்கியது. தனித்துவக் கட்சிகளும் தேசியக் கட்சிகளோடு ஒட்டிச் செல்லும் போக்கையே அதனைத் தொடர்ந்து கடைப் பிடிக்கத் துவங்கியுள்ளன. அத்தோடு பழைய தனித்துவ அரசியற் போக்கில் ஏற்பட்ட குழறுபடிகளின் காரணமாக புதிய சில அரசியல் பிரவேசங்களை நாம் கண்டு வருகிறோம்.

எவ்வாறிருந்த போதும் இன்றைய நிலையில் தனிக் கட்சிகளோ, தேசிய கட்சிகளின் உள்ளே உள்ள அரசியல் தலைமைகளோ முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாக வழிகாட்டும் வகையிலான தலைமைத்துவத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்பது உண்மையாகும்.

இத்தகையதொரு  சிக்கலான முஸ்லிம் அரசியல் சூழ்நிலையிலேயே முஸ்லிம் அரசியல் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மிக மோசமாக சிதறுண்டு போயுள்ளமையை அவதானிக்கிறோம்.

இவ்வாறு முஸ்லிம் அரசியல் என்பது தெளிவான திசையின்றிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் தங்களது எதிர்கால அரசியற் செயற்பாடு குறித்து கவனமாக சிந்தித்து ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

Reply