உள்ளூராட்சித் தேர்தலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வாழ்வும்

நாம் இப்போது ஓர் உள்ளூராட்சித் தேர்தலை சந்திக்கிறோம். சிறுபான்மைக்கு அரசியல் வாழ்வு தவிர்க்க முடியாதது. மிகவும் அவசியமானது. அந்த அவசியத்தை கீழ் வருமாறு நாம் வகுத்துக் கூறலாம்:

  1. முஸ்லிம் ஊர்களுக்கு மின்சாரம், நீர், பாதை போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் கீழ்க்கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளல். இக் கீழ் கட்டமைப்பு சீராக இருக்கும் போதுதான் கிராமங்களின் பௌதீக வாழ்வு சீராக அமைய மானசீக வாழ்வின் சீரமைப்புக்கும் அது துணை செய்வதாக அமையும்.
  2. கல்வி, பொருளாதாரம், என்ற வாழ்வுக்கு ஆதாரமாக அமையும் இரண்டு அம்சங்களையும் பலப்படுத்திக் கொள்ளல்.
  3. முஸ்லிம் சமூகத்திற்கெனத் தனித்துவமாக அமையும் மார்க்க வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ளல். இப் பகுதியில் அடங்குபவை கீழ்வருமாறு.

அ.   முஸ்லிம் தனியார் சட்டமும் காழி நீதி மன்றங்களும்

ஆ.  அஹதிய்யா பாடசாலை ஒழுங்கு

இ.  பாசாலைகளில் இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம் அரபு மொழி என்ற பாடங்கள்

ஈ.    பல்கலைக் கழக அரபு, இஸ்லாம், இஸ்லாமிய நாகரீக பீடங்கள்

உ.   அல் குர்ஆன் மத்ரஸாக்கள், இஸ்லாமியத் துறைசார் மத்ரஸாக்கள்

ஊ.  பள்ளி வாயில்கள், பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்கள், இஸ்லாமிய  இயக்கங்கள்

 

இம் மூன்றாவது பகுதியைக் காப்பதும், வளர்ப்பதும் முஸ்லிம் சமூகத்தின் ஆன்மாவைக் காப்பதாகவும், வளர்ப்பதாகவும் அமையும்.

தேசிய பாராளுமன்றம், மாகாண சபைக்கான பாராளுமன்றங்கள், உள்ளூராட்சி சபைக்கான பாராளுமன்றங்கள் என இலங்கை மூன்று வகை ஆட்சி ஒழுங்குகளைப் பெற்றுள்ளது. இந்த மூன்றுமே ஏற்கனவே விளக்கப்பட்ட, முஸ்லிம் சமூகத்தின் மூன்று அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதில் ஏதோவொரு வகையில் பங்களிப்பு செய்கின்றன.

எமது இந்த மூன்று அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவு செய்து கொள்ளவே நாம் அரசியல் பகுதியில் ஈடுபாடு காட்டுகிறோம். ஈடுபாடு காட்ட வேண்டும்.

இந் நிலையில்  எமது அரசியல் வேலைத் திட்டத்தில் பல அம்சங்களை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

  1. முஸ்லிம் சமூகத்திற்கு தேசிய அரசியல் தலைமையொன்று மிகவும் அவசியமானது. பத்யுத்தீன் மஹ்மூத், ஏ.ஸி.எஸ் ஹமீத் போன்றோரின் அரசியல் தலைமை இன்று வெற்றிடமாகவே உள்ளது. அது எமக்கு பல்வேறு பாதக நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போது நாம் அத்தகைய தலைமை ஒன்றை அல்லது தலைமைக் குழுவொன்றையும் தேட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தலில் குதித்துள்ளோரில் எதிர்காலத்தில் அதற்குத் தகுதியாகக் கூடியவர்கள் இருக்கக் கூடும். அவர்களை நாம் தேடி முற்படுத்த வேண்டும்.
  2. இந்த நாட்டுக்கு அரசியல் சக்திகளால் இரண்டு அபாயங்கள் உள்ளன:
    1. இன முரண்பாடுகளால் எழும் இன மோதல்கள் நாட்டைப் பின்னடையச் செய்யும் பிரதான காரணிகளில் ஒன்று. 30 வருடகால யுத்தம் எமது நாட்டுக்கு தந்த பேரழிவு இங்கு கவனத்திற் கொள்ளத் தக்கது. எனவே இனங்களின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் தலைமையும், அரசியற் கட்சியுமே எமது பிரதான தேவை.
    2. பயங்கர முதலாளித்துவ பிடியில் நாடு சிக்கிக் கொள்ளல். விளைவாக நாட்டின் இயற்கை சூழல் படிப்படியாக அழிந்து சூழல் மாசடைதல் என்ற நிலை பாரியளவு உருவாகல். அத்தோடு தொழிலாளி வர்க்கத்தின் மீது பயங்கர அநியாயங்கள் நிகழல். மக்களுக்கு மத்தியில் ஆடம்பர மோகமே வலுத்து பயங்கர ஒழுக்க சீர்கேடுகளுக்கு உட்படலும் இதனால் உருவாக முடியும்.

இந் நிலையில் நாட்டிற்கான பொருத்தமான தேசியத் தலைமையும், அரசியற் கட்சியும் எது என சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இது ஒரு அடிமட்டத் தேர்தலாக இருக்க முடியும். ஆனால் மக்கள் இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தமது செய்தியை அனுப்பிவைக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

எமக்கு நான்கு தெரிவுகள் உள்ளன:

  1. U.N.P கட்சி
  2. பழைய S.L.F.P : மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமையிலும் தற்போதைய ஜனாதிபதியின் தலையிலும் அது இரண்டாகப் பிரிந்துள்ளது.
  3. J.V.P என்ற மக்கள் விடுதலை முன்னணி.

முஸ்லிம்கள் மேலே குறிப்பிடப்பட்ட கட்சிகள் அனைத்திற்கும் பிரிந்து நிற்பதோடு அவர்களது தனிக் கட்சிகளும் பிரிந்து நிற்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் ரவுப் ஹகீமின் தலையிலும் ரிஷாட் பதீயுத்தீனின் தலைமையிலும் பிரிந்து நிற்கிறது.

அத்தோடு புதிய கட்சியாகிய பழைய நல்லாட்சிக்கான கட்சி (NFGG) அப்துர் ரஹ்மான் தலைமையின் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ளூராட்சித் தேர்தலில் நின்றுள்ளது.

மேலே விளக்கப்பட்ட அனைத்து விடயங்களையும்  நன்கு கவனத்திற் கொண்டு இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இந் நிலையில்தான் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் விழிப்புணர்ச்சியூட்டும் வேலைத் திட்டமொன்று காணப்படுதல்  அவசியமாகிறது.

Reply