சீரான சமூக இயக்கத்திற்கு…
முஸ்லிம் சமூகத்தின் சமூக ரீதியான இயக்கம் எவ்வாறானது என்பதை இதுவரை எழுதி வந்தோம். பொருளாதாரம், அரசியல் என்ற இவ்வாறான எப் பகுதிசார் இயக்கமானாலும் துறைசார் சார்ந்தோர் பங்களிப்பு அங்கு முக்கியமானது, முதன்மையானது என்பதை அந்த விளக்கங்களினூடே கண்டு வந்தோம்.
இப் பின்னணியில் தலைமை வகித்து முஸ்லிம் சமூகத்தை வழி நடாத்தக் கூடியவர்கள் துறைசார் புத்திஜீவிகளே என்ற கருத்திற்கு நாம் வர வேண்டிய நிலை உள்ளது. இப் பகுதியில் நான்கு விடயங்களை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
- கருத்துத் தெளிவின்மை: இஸ்லாமியத் துறை சார்ந்த ஷரீஆ துறை சார்ந்தவர்களே முஸ்லிம் சமூகத்தை வழி நடாத்தப் பொருத்தமானர்கள் என்ற கருத்து பரவலாகக் காணப்படுகின்றது. இதற்கு பிரச்சினைகள் பற்றிய தெளிவின்மையே காரணமாகும்.
சிறுபான்மை சமூகம் இஸ்லாமிய ஷரீஆப் பாஷையில் சொன்னால் வரையறுக்கப்படா நலன்கள் – மஸாவிஹ் முர்ஸலா – சார்ந்த பகுதியை கட்டமைத்து ஒழுங்கு படுத்துவதில்தான் தனது பலத்தைக் கட்டியெழுப்பிக் கொள்ள முடியும். பொருளாதாரம், அரசியல், கல்வி, சுகாதாரம் போன்ற வரையறுக்கப்படா நலன்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகள்சார் நலன்களை வகுக்கக் கூடியவர்களும் அவற்றிற்கேற்ப சமூகத்தை இயக்கக் கூடியவர்களும் துறைசார் புத்திஜீவிகளேயாவர். இப் பகுதிகளில் ஆங்காங்கே தேவைப்படும் சில பத்வாக்களின் போது மட்டுமே ஷரீஆத் துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு அவசியமாகும்.
இந்தக் கருத்துப் பின்னணியில் நவீன காலத்தின் ஆரம்பப் பகுதியில் சித்திலெப்பையும் அவரோடு கூட்டுச் சேர்ந்து இயங்கிய துறைசார் புத்திஜீவிகளின் செயற்பாடு குறித்து அவசியம் நாம் நினைவு கூற வேண்டும். அத்தகையதொரு பணியே இன்றும் அவசியமாகிறது.
- துறைசார் புத்திஜீவிகள் இஸ்லாமிய மயப்படல்: ஆழ்ந்த இறை தொடர்பு, வணக்க வழிபாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு, அல் குர்ஆனுடனான தொடர்பு, அடிப்படை இஸ்லாமிய சிந்தனைகள் பற்றிய தெளிவு என்ற இப் பகுதிகளில் துறைசார் புத்திஜீவிகள் பயிற்றுவிக்கப்படல் என்பதுவே இஸ்லாமிய மயப்படல் என்பதால் நாம் கருதுவதாகும். அவர்கள் ஷரீஆத் துறை அறிஞர்களாக மாற வேண்டும் என நாம் எதிர்பார்க்கத் தேவையில்லை.
இவ்வாறு அவர்கள் மாறும் போதுதான் அவர்களது வழிநடாத்தல் சீர் பெறும் என நாம் எதிர்பார்க்க முடியும். மீண்டும் ஒருமுறை சித்திலெப்பையை நாம் நினைவு கூற வேண்டியவர்களாகிறோம். அவர் இஸ்லமியப் பகுதியில் நல்ல பரீச்சயமுள்ளவராக இருந்தார். அரபு மொழியை அவர் கற்றறிந்திருந்தார். அஸ் ராருல் ஆலம் என்ற அல்லாஹ்வை விளக்கும் நூலொன்றையும் எழுதினார். ஸாகிராக் கல்லூரியில் மாணவர்களை இஸ்லாமிய ரீதியாகப் பயிற்றுவிப்பது குறித்துக்கவனம் செலுத்தினார். இத்தகைய புத்திஜீவிகளையே நாம் எதிர் பார்க்க வேண்டும்.
இது ஒரு கடின வேலைத் திட்டமல்ல. ஆங்கில மொழியில் இஸ்லாம்சார் நூல்கள் மிக அதிகமாகக் கிடைப்பதால் இது ஓரளவு இலகுவான வேலைத்திட்டமாகவே உள்ளது. எனினும் இத்தகைய புத்திஜீவிகளை இஸ்லாமிய மயப் படுத்தத் தகுதி வாய்ந்த ஒரு பிரிவினர் முன் வைத்து உழைத்தல் காலத்தின் அடிப்படைத் தேவையாக உள்ளது.
- முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தும் இந்த வேலைத் திட்டம் கிராமம் கிராமமாக ஒழுங்குபடுத்தலே மிகவும் இலகுவானதும், சாதிக்கக் கூடியதுவுமாகும். தேசிய ரீதியான நிறுவனமாக எழுந்து அதனை கிராமங்களுக்கு விஸ்தரித்து இவ் வேலைத் திட்டத்தைக் கொண்டு கொண்டு செல்வது என்பது மிகவும் சிரமமானது. நிதி, பல்வேறு கிராமங்கள், பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி ஒன்று கூடுவதிலுள்ள பிரச்சினை, இதற்காக இயங்குவோர் பற்றாக் குறை என்ற பிரச்சினை, ஒவ்வொரு பிராந்தியம், கிராமங்களிலுள்ள தனித்துவமான சூழல்கள், பிரச்சினைகளை இனங்கண்டு இயங்குதல் என்பதிலுள்ள பிரச்சினை போன்ற இவ்வாறான காரணங்களால் தேசிய ரீதியாக இயங்குதல் மிகவும் சிக்கலானது. எனினும் விளிப்புணர்வூட்டல், பயிற்றுவித்தல் என்பதற்கான தேசிய நிறுவனங்கள் காணப்படலாம்.
- துறைசார் புத்திஜீவிகள் ஒரு சிறிய தொகையினர் இப்போது இயங்கி வருகிறார்கள் என்பது உண்மை. எனினும் அவர்கள் போதுமானளவு இஸ்லாமிய அறிவைப் பெறவில்லை என்பதும் அத்தோடு அவர்கள் முன்னணி இடத்தைப் பெறவில்லை என்பதும் முக்கியமான உண்மை. அவர்கள் தம்மை வளர்த்துக் கொள்வதும், பரந்தளவு புத்திஜீவிகளை இணைப்பதும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணியாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பான வாழ்விற்கும், வளர்ச்சிக்கும், சீரான இயக்கத்திற்கும் இங்கு விளக்கப்பட்ட விடயம் ஓர் அடிப்படைச் ஷரத்தாகும். எனவே இது சமூகக் கலந்துரையாடலாக மாற வேண்டும் என எதிர்பார்ப்போம்.