சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் இயக்கம்

ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் இயக்கம் பற்றியும் அவ்வியக்கத்தை வழிநடத்துவோர் பற்றியும் புரிந்து கொள்ள சில கருத்துக்களை இங்கே பரிமாறிக் கொள்வோம்.

ஒரு முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையான இயக்கம் – அது சிறுபான்மையாயினும், பெரும்பான்மையாயினும் – நம்பிக்கையும், வணக்க வழிபாடுகளுமாகும். நம்பிக்கை பகுதி அடிப்படையில் அறிவு சார்ந்தது. எனவே பாடசாலைகள் ஊடாக இதனை உயிரோட்டமாக எவ்வாறு கொடுக்கலாம் என ஒரு முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். இஸ்லாம் பாடத்தில் மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக இப் பகுதி அமைதல் மிகவும் அத்தியவசியமானது. இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் அக்கறை கொள்ளல் அதன் அடிப்படைப் பொறுப்பாகும். குறிப்பாக நாஸ்திக சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தும் இக் காலப் பகுதியில் ஆழமாக இப் பகுதி கற்பிக்கப்படல் மிக அவசியமானதாகும். முஸ்லிம் பாடசாலைகள் இஸ்லாம் பாடத்திற்கு வெளியிலும் இப் பகுதியில் கவனம் செலுத்த முடியும். இந்த வகையில் பாடசாலையின் பாடத்திட்டத்திற்கு வெளியிலான நிகழ்ச்சி நிரலில் இதற்கு இடமிருக்க வேண்டும்.

புவியியல், விஞ்ஞான பாடங்களும் இப் பகுதியில் காத்திரமான பங்களிப்பைச் செய்யலாம் என்பது அவதானத்திற் கொள்ளப் படத் தக்கதாகும்.

அல் குர்ஆன் நம்பிக்கைப் பகுதியை முன்வைப்பதில் அடிப்படையான பங்களிப்பை செலுத்தலாம் என்ற வகையில் அல் குர்ஆன் விளக்கவுரைப் பகுதிக்கு இஸ்லாம் பாடத்தில் ஒரு முக்கிய இடம் வழங்கப்பட்டு அரபு மொழிப் பாடமும் ஒரு அத்தியாவசியப் பாடமாக அமையும் வகையில் இஸ்லாம் பாடத்தின் ஒரு பகுதியாக அது கொள்ளப்பட ஆவன செய்தல் மிக முக்கியமானதாகும்.

மிகவும் திட்டமிட்ட வகையில் இது வகுக்கப்பட்டால்  மாலை நேர அல் குர்ஆன் மத்ரஸா நிறுவன ஒழுங்கின் தேவை இருக்க மாட்டாது.

பள்ளி என்ற நிறுவன ஒழுங்கும் தனது திட்டமிட்ட செயற்பாட்டின் ஊடாக நல்லதொரு பங்களிப்பை இப் பகுதியில் நிறைவேற்ற முடியும்.

சமூகத்தின் இந்த இயக்கத்தில் பங்களிப்பு செய்ய வேண்டியவர்கள் கீழ்வருவோராவர்:

  1. பாடத்திட்ட மாற்றம் என்ற வகையில் அரசியல் வாதிகள்.
  2. தகுதியான ஆலிம்களை உருவாக்கி அளித்தல் என்ற வகையில் மத்ரஸாக்கள்.
  • பாடத்திட்ட வரைவு என்ற வகையில் இஸ்லாம் பாடம் சார்ந்த கல்வி இயலாளர்கள்.
  1. தகுதியாக்கப்பட்ட விஞ்ஞான துறை ஆசிரியர்கள்.

வணக்க வழிபாடுகள் அடுத்த அடிப்படைப் பகுதியாகும்.

வணக்க வழிபாடுகளைப் பொறுத்தவரையில் அதனை நிறை வேற்றலுக்கான ஒழுங்குகளையும், வணக்க வழிபாட்டை நிறைவேற்றலையும் பிரித்து நோக்க வேண்டும்.

பள்ளி, பாங்கு இகாமத் சொல்லல், வெள்ளிக் கிழமை தொழுகைக்கான ஆட்கள் தொகை, பிறை நிர்ணயம் என்பவற்றையே வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலுக்கான ஒழுங்குகள் என்றோம். இப் பகுதியில் நாம் கவனிக்க வேண்டிய அல்லது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவற்றை கீழே குறிப்புகளாகத் தருவோம்:

  1. உயர்ந்த மினாராக்களை அமைத்து தேவைக்குமேல் கட்டிடத்தை மிகப் பாரியதாக ஆக்கி, மிகுந்த ஆடம்பரமாக பள்ளிகளை அமைத்தல் வாஜிபோ, சுன்னாவோ அல்ல. மாறாக பள்ளி எளிமையாக அமைதல் சுன்னாவாக இருக்க முடியும் என வாதிட இடமுண்டு. சிறுபான்மை சமூகத்திற்கு இந்த எளிமையே மிகப் பொருத்தமானது.
  2. பாங்கை ஒலி பெருக்கி மூலம் சொல்வது வாஜிபோ, சுன்னாவோ அல்ல. உஸ்மான் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமையின் போது மட்டுமே பாங்கு ஒரு பெரும் மக்கள் தொகைக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக தனியான ஏற்பாடொன்றைச் செய்தார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந் நிலையில் தேவையையும், பிரச்சினைகள் தோன்ற இடமில்லை என்பதையும் கவனித்திற் கொண்டே ஒலி பெருக்கி பாவித்தல் பற்றி ஆலோசித்தல் சிறந்தது. அந் நிலையிலும் அண்மித்துள்ள பள்ளிகள் பலவற்றில் ஒரே நேரத்தில் பாங்கு சொல்லலைத் தவிர்க்க வேண்டும்.

 

  • தொழுகைகளுக்கான இகாமத் சொல்லும் நேரத்தை பல பள்ளிகள் இருக்கும் நகர்களில் வித்தியாசப்படுத்தல், இஷாத் தொழுகையை ஓரளவு பிற்படுத்தித் தொழுதல். இது இஷாவின் பின்னர் வேறு வேலைகளில் ஈடுபடக் கூடாது என்ற இறை தூதர் (ஸல்) அவர்களது கட்டளையை ஒரளவு நிறைவேற்றியதாகவும் அமையும்.
  1. ஜும்மாஆத் தொழுகையின் ஆரம்ப நேரம், முடிவு நேரம் பற்றிய ஹன்பலி, மாலிகி மத்ஹபுகளின் அபிப்பிராயங்களைக் கவனத்திற்கு கொண்டு எமது ஜும்ஆ இயக்கத்தை ஒழுங்கு படுத்தல்.
  2. ஜும்மா தொழுகைக்கான ஆட்கள் தொகை பற்றிய பல்வேறு சட்ட அபிப்பிராயங்களைக் கவனத்திற்கு கொண்டு சின்னஞ்சிறு கிராமங்களிலும் ஜும்ஆ தொழ வேண்டுமா என்பது பற்றிய பொருத்தமான தீர்மாணத்திற்கு வரல்.
  3. பிறை நிர்ணய முறையால் ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களை அவதானத்தில் கொண்டு கணிப்பீட்டு முறை, சர்வதேசப் பிறை சம்பந்தமான அபிப்பிராயங்கள் பற்றிய பொருத்தமான தீர்மாணத்திற்கு வரல். தற்போதைய பிறை நிர்ணயிக்கும் முறை முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிக்கிறது, அரச மட்டத்திலும் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

வணக்க வழிபாட்டை நிறைவேற்றல் என்ற பகுதியில் தொழுகை, நோன்பு, ஹஜ் என்ற வணக்கங்கள் உயிரோட்டமாக நிறைவேற்றப்படல் என்ற கருத்தை மையப் படுத்திய ஆய்வுகள் நடைமுறைக்கு வரவேண்டும். இப் பகுதியில் ஓக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியர் அஹ்மத் பஸ்ஸாம் சாயின் நூல் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். “தொழுகை – மீள் கண்டறிதல்” என இந்த நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

“உயிரோட்டமாகத் தொழப் பயிற்றுவித்தல்” என்ற வேலைத் திட்டமொன்று இந்தப் பின்னணியில் கிராமம் கிராமமாக ஆரம்பிக்கப் பட வேண்டும். அதனை ஒரு ஆலிம், ஒரு மனோதத்துவவியலாளர், ஒரு டாக்டர் என்போர்கள் சேர்ந்து நடாத்துவதே மிகப் பயனுள்ளதாக அமையும்.

ஜும்மாத் தொழுகையின் போதான குத்பா நன்கு திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு மத்தியில் விளிப்புணர்வூட்டும் மிகப் பெரும் சாதனமாக அது இருக்க முடியும் என்பது நன்கு புரியப்பட்டு குத்பாக்கள் பற்றிய ஒரு சிறந்த திட்டமிடல் மிகவும் அவசியமானதாகும்.

நோன்பு என்ற பகுதி கீழ்வருமாறு உயிரோட்டமாக்கபடலாம்:-

  1. மருத்துவப் பயன்பாடு குறித்த விளிப்புணர்வூட்டல்.
  2. நோன்பைப் பயனற்றதாக்கும் உணவுப் பழக்கவழக்கம் பற்றிய விளிப்புணர்வூட்டல். இப் பகுதியில் கஞ்சி விநியோகம் குறித்த மீள் பரிசீலனைக்கு வரல். ஒரு கஞ்சிக்கு மிகவும் சாதாரணமாக 5,000 /= எனக் கொண்டாலும் மாதம் 150,000/= செலவாகும். இது விலைகொடுத்து நோயை வாங்குவதாகுமா என சிந்தித்தல்.
  • பள்ளிகள் நோன்பு மாதத்தை ஆன்மீகப் பயிற்சியின் மாதமாக்கும் நுணுக்கமான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப் படுத்தல்.
  1. அடுத்த சமூகங்களுக்கு எந்தத் தொந்தரவுமற்ற மாதமாக மட்டுமல்ல அவர்களுக்கு பயன் கொடுக்கும் மாதமாக்கும் வழிமுறைகள் பற்றிச் சிந்தித்தல். “சதகாவின் மாதம்” நோன்பு மாதம் என்ற கருத்தை இங்கு பிரயோகிக்கலாம் என்பதை மக்களுக்கு அவதானப் படுத்தல்.

ஹஜ், உம்ரா வணக்கம் மிக ஆழியதொரு ஆன்மீகப் பயிற்சிக்குக் காரணமாகலாம். அதற்காக அது கீழ்வருமாறு ஒழுங்கு படுத்தப் பட வேண்டும்:

  1. இந்த வணக்கங்களுக்கான பயிற்சி ஹஜ்ஜுக்காகப் பிரயாணப் பட முன்னால் சொந்த நாட்டிலேயே வழங்கப்படல். அதாவது இவ் வணக்கம் சம்பந்தமான அல் குர்ஆன், சுன்னாவின் வசனங்களை ஆழ்ந்து படித்தல்.

உம்ரா, ஹஜ்ஜின் பொதுத் தத்துவத்தையும், ஒவ்வொரு கிரியையின் பின்னாலுள்ள கருத்தையும் கற்பித்தல்.

  1. மேற் கூறியவாறு தயார் படுத்தியதன் பின்னர் ஹஜ் வணக்கத்தின் குறிப்பிட்ட ஒரு மாத காலத்தையும் பயன்படுத்துவதற்கான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்தல்.

இவை நடைமுறையாக மிகவும் தகுதிவாய்ந்த ஆலிம் ஒருவரோ, இருவரோ ஒவ்வொரு ஹஜ் குழுவிலும் இடம் பெற வேண்டும்.

உண்மையில் வணக்க வழிபாடுகள் என்பவை சுன்னத்தான பல வணக்கங்களையும் கொண்டவையாகும், அவற்றில் அல் குர்ஆன் ஓதலும், திக்ர்களும் மிகப் பிரதானமானவையாகும். இவ்விரு பகுதிகள் பற்றியும் இரு விடயங்கள்:

  1. அல் குர்ஆன் விளக்கவுரை சமூக மட்டங்கள் முழுவதிலும் கொண்டு செல்லப் படுவதற்கான ஒரு பெரும் ஏற்பாடு செய்யப் படுதல். அது ஆலிம்கள், ஆலிம் அல்லாத தரம்வாய்ந்த புத்தி ஜீவிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்றுவிக்கப் படுவதன் மூலம் சாதிக்கப்படலாம்.
  2. தெரிவு செய்யப்பட்ட மிகப் பிரதான திக்ர் பொருள், விளக்கம் என்பவற்றோடு சமூகமயப் படுத்தப் பட வேண்டும்.

நம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள் ஊடாகவே மனித மனங்களில் ஆழமாகப் பதிக்கப் படுகின்றன. இந்த வகையில் வணக்க வழிபாடுகள் பலவீனப் படும் போது நம்பிக்கைகளும் பலவீனமுறுகின்றன.

முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு சீர்கேடுகள் பற்றி நாம் கவலைப் பட்டுக் கொள்கிறோம். நடத்தைச் சீர்கேடுகள், முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடலில் விடப் படும் தவறுகள், ஆடம்பர மோகம், வியாபார நடவடிக்கைகளில் ஹராம், ஹலால் பேணாமை என்றிவ்வாறு அவை பற்றிப் பேசுகிறோம். ஆனால் அவற்றிக்கெல்லாம் அடிப்படைக் காரணம் நம்பிக்கைப் பலவீனம், வணக்க வழிபாடுகள் உயிரோட்டமின்மை என்ற உண்மையை மறந்து விடுகிறோம்.

ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதில் நம்பிக்கைக்கும், வணக்க வழிபாட்டுக்கும் உள்ள பங்களிப்பு பாரியது. சீர் கெட்ட மனிதனை சீராக்குவதிலும் அவ்விரண்டும் காத்திரமான  பங்களிப்பைச் செய்ய முடியும்.

எமது சமூகத்தில் நம்பிக்கை, வணக்க வழிபாடு இரண்டும் மிகப் பலவீனமாக உள்ளது என்பது மிகவும் தெளிவானது. அவற்றை பலப் படுத்த நாம் திட்டமிட்ட எந்த முயற்சியிலும் இதுவரை பரந்த அளவில் ஈடுபாடு காட்டவில்லை.

உளவியல் பயிற்சிகள், தலைமைத்துவப் பயிற்சிகள், மருத்துவ விளக்கங்கள், வாழ்க்கைத் திறன் பயிற்றுவித்தல்கள் என எவ்வளவோ செய்து பார்க்கிறோம். ஆனால் நம்பிக்கை, வணக்க வழிபாடு என்ற இரு பகுதிகளிலும் திட்டமிட்ட வேலைத் திட்டங்களோடு நாம் களமிறங்கவில்லை என்பதே உண்மையாகும்.

சீரான சமூகத்தை ஆக்க இந்த அடிப்படை வேலைத் திட்டத்தில் கவனம் செலுத்துவோம். முன்னால் குறிப்பிடப்பட்ட ஏனைய பயிற்றுவித்தல்கள் தேவையில்லை என யாரும் கூறமாட்டார். ஆனால் அடிப்படை வேலைத் திட்டத்தின் மீது அவை அமைய வேண்டும் என்றே கூறுகிறோம்.

முஸ்லிம் சிறுபான்மை சமூக இயக்கத்தின் அடுத்த பகுதிகளை அடுத்த கட்டுரையில் நோக்குவோம்.

Reply