எமது சமூக யதார்த்தத்தை நோக்கி…
“இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய இயக்கங்கள், இஸ்லாமிய சமூகத்தின் மீதெழுந்த அபாயகரமான சவால்களால் தாக்கமுற்று எழுந்தன. அவ்வபாயகரமான சவால்கள் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அவற்றின் உச்ச நிலையை அடைந்திருந்தன. இஸ்லாமிய சமூகத்தின் அரசியற் கட்டமைப்பு, புவியியல் எல்லைகள், கிழக்கிலும் மேற்கிழுமிருந்த அதன் நாடுகள் என்பவற்றிற்கு அச்சுறுத்தலாக அமைதல் என்ற எல்லையோடு அந்த அபாயங்கள் நிற்கவில்லை. மாறாக இந்த சமூக, சமூக மார்க்கக் கட்டமைப்பிற்கே அவை அச்சுறுத்தலாக அமைந்தன.”
இந்த அபாயங்கள், சவால்களின் கருப்பையிலிருந்து, அவற்றின் சூழல்களின் உள்ளிருந்தே இஸ்லாமிய இயக்கம் தோன்றியது. இஸ்லாமிய நாடுகளில் பல்கிப் பெருகவும் செய்தது. இந்த வகையில் இந்த இயக்கங்கள் போராட்டக்களத்தில் உருவாகின. எனவே மிகப் பெரும்பாலான இஸ்லமிய இயக்கங்கள் தர்க்கித்து வாசிக்கும் திறன் கொண்ட பிரச்சாரகர்கள், தியாக உணர்வுமிக்க முஹாஜிதுகள் என்போரை உருவாக்கலை மையப்படுத்தின அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களை உருவாக்குவதை அவை மைய வேலைத் திட்டமாகக் கொள்ளவில்லை. இஸ்லாமிய இயக்கங்களினுள்ளே இத்தகைய ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் தோன்றினார்கள் எனின் அது “தவறுதலான“ ஒரு நிகழ்வே என்று சொல்லாவிட்டாலும் போகிற போக்கில் தோன்றினார்கள் என்றே கூற வேண்டும்.
இது அறிஞர் அஹ்மத் ரைஸூனியின் வார்த்தைகள். “இயக்கத்தின் சிந்தனை, சிந்தனையின் இயக்கம்” என்ற தலைப்பின் கீழ் “மா-கல்ல-வ-தல்ல” என்ற நூலில் இதனை அவர் எழுதியுள்ளார்.
ஆனால் இன்றைய சூழலில் அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், ஆய்வாளர்களையும் உருவாக்கலை மையப்படுத்தலே பொருத்தமாகும். எனவும் மேலும் அவர் விளக்கிச் சொல்கிறார்.
எம்மைப் பொருத்தவரையில் நிலைமை என்ன? இலங்கையின் சூழல் இயக்கங்கள் தோன்றிய காலப்பிரிவில் முஜாஹிதுகளையும், உயிர்த்தியாகம் செய்து போராடுபவர்களையும் வேண்டி நின்றதா? அப்போது எம்முன்னே இருந்த சவால்கள் யாவை? அவற்றை எதிர்கொள்ள எத்தகைய மனிதர்கள் தேவை?
சித்திலெப்பை ஆங்கிலக் கல்வியை முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்ப முற்பட்டமை சூழலின் எதிர்வினையாகும். முஸ்லிம் பாடசாலைகள் தேவை என வாதாடியமையும் அவ்வாறானதே.
ஆனால் சட்டமியற்றும் அதிகாரம், கிலாபத், இஸ்லாமிய சமூக அமைப்பு, இஸ்லாமிய அரசு பற்றிப் பேசியமை உண்மையில் சூழலின் எதிர்வினையன்று. சர்வதேசிய முஸ்லிம் உம்மாவின் போராட்டத்தினது தாக்கம். இவை எல்லாம் ஒரு வகை செயற்கைத் தன்மை கொண்டது.
சிறுபான்மை சமூகம் பற்றிய கோட்பாட்டு ஆய்வுகள், முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல் பற்றிய கோட்பாட்டு, நடைமுறை சம்பந்தமான எழுத்துக்கள், மைய நீரோட்டத்தில் கலந்து வாழ்தல் பற்றிய அறிவுபூர்வக் கலந்துரையாடல்கள் போன்றவையே எம்மத்தியில் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். இந்த வகையில் ஒரு சிறுபான்மை இலக்கியத்தை நாம் கட்டி வளர்த்திருக்க வேண்டும். ஆனால் இதனோடு சம்பந்தப்படும் பல நிகழ்வுகளை நாம் எதிர்கொண்ட போதும் இஸ்லாம் பற்றிய ஆழ்ந்த புரிதலின்மையாலும், பாரம்பரிய சிந்தனைத் தர்க்கத்தாலும் அரபு, இஸ்லாமிய உலகின் சிந்தனைத் தாக்கத்தாலும் இத்தகைய போக்கு எம்மிடம் உருவாகி வளரவில்லை.
இஸ்லாத்திற்காக உழைத்தல் என்ற பகுதியிலும் இஸ்லாமிய உலகின் தாக்கத்தால் இயக்கக் கட்டுமானங்களே எம் மத்தியில் தோன்றின. எமது வாழ்வமைப்புக்குப் பொருத்தமான கட்டமைப்புகள் தோன்றவில்லை.
நாம் பின்பற்றும் சட்ட ஒழுங்கும் கூட எமது சூழலின் தெரிவல்ல. அது வரலாற்று ஓட்டத்தில் எம் மீது வந்து விழுந்த சட்ட மத்ஹப் ஆகும்.
ஆனால் மிக அண்மைக் காலமாக இலங்கை சமூக யதார்த்தத்தை நோக்கி இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமியத் துறைசார்ந்தோரும் வரமுற்பட்டுள்ளனர். இன உணர்வு கூர்மையடைதலை ஒட்டிய நிகழ்ச்சிகளே இதற்குப் பிரதானமான காரணம் எனக் கூறலாம்.
உண்மையில் சிறுபான்மை சமூக யதார்த்தம் சார் ஆய்வுகள் எம்மிடையே விரிவுபட வேண்டும். அது இரு பகுதிகளாக அமைய வேண்டும்:
மூடுண்ட சமூக நிலையைவிட்டு மைய நீரோட்டத்தில் கலத்தல் சார் கோட்பாட்டு சட்ட ஆய்வுகள்.
முஸ்லிம் தனித்துவமும் அதனை காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், பயிற்சி ஒழுங்குகள் சார்ந்த ஆய்வுகள்.