இயற்கை அழிவுகளும், அனர்த்தங்களும் – ஒரு சிந்தனை
ஜப்பான் உலகில் பொருளாதார பலத்தாலும், அறிவு பலத்தாலும் முன்னணியில் நிற்கும் ஒரு நாடு. ஆனால் அந்த நாட்டின் உண்மை நிலை என்ன?… கீழே தரும் தகவல்களை அவதானியுங்கள்.
ஜப்பானின் நிலப் பரப்பு 1,45,902 சதுர மைல், இந்த நிலப் பரப்பில் 73% மலைகள். எனவே வாழ வசதியான நிலப் பரப்பு 39,393 சதுர மைல் மட்டுமே.
உலகின் எரிமலைகளில் 10% வை ஜப்பானிலேயே உள்ளன. அதாவது 107 எரிமலைகள். ஒவ்வொரு வருடமும் 1500 நில நடுக்கங்கள். சூறாவளிக் காற்று, ராட்சத அலைகள், பனிப்புயல்கள் அடிக்கடி.
மார்ச் 11 2011 ஜப்பானையே சிதறடித்த சுனாமியின் தாக்கம்
பல இடங்களில் 24 அடிக்கு மேல் உயர்ந்த கடல். புகுஷிமா அணுமின் நிலையம் வெடித்தமை, 235 பில்லியன் டொலர்களுக்கு மேல் சேதம்.
தொழில் உற்பத்திக்கு தேவையான இயற்கை வளங்கள் ஜப்பானில் மிகக் குறைவு. அரிசி, கோதுமை, சோளம், சோயா என்ற எல்லாவற்றிக்கும் வெளிநாடுகளை நம்பியிருத்தல்.
இதோ சில மூலப் பொருட்கள் சம்பந்தப் பட்ட புள்ளி விபரங்கள்.
மூலப் பொருள் | தேவையில் இறக்குமதி |
பெற்றோலியப் பொருட்கள்
கரி இரும்புத் தாது அலுமினியத் தாது தகரம் நிக்கல் செம்பு ஈயம் துத்த நாகம் |
99.60%
92.10% 100.00% 100.00% 100.00% 100.00% 98.90% 93.00% 82.90% |
இரண்டாம் உலகமகாயுத்தத்தில் உடைந்து சிதறிப் போன நாடு ஜப்பான் :
ஒகஸ்ட் 1945 அணு குண்டு வீச்சுக்குட்ட ஹிரோஷிமா, நாகசாகி நகர்கள் நாசமாயின.
(ஜப்பான்- பக் : 10, 11, 12 எஸ். எல். வி. மூர்த்தி)
இவ்வளவுமிருந்தும் ஜப்பான் இன்று உலகில் முன்னணியில் நிற்கும் ஒரு நாடு. எப்படி இது சாத்தியமாகிறது?
கீழ்வரும் இரண்டு திருறை வசனங்களையும் அவதானிப்போம்:
“அல்லாஹ்தான் அவன் கட்டளைப் படி கப்பல் ஓடுவதற்காகவும், அவனது அருளைத் தேடுவதற்காகவும் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். அத்தோடு நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காகவும் அவ்வாறு ஆக்கினான். அத்தோடு உங்களுக்கு வானங்கள், பூமியிலிருப்பவற்றை வசப்படுத்தியுள்ளான். அனைத்தும் அவனிடமிருந்தேயாகும். நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.” (ஸூரா அல் ஜாதியா 45 12, 13)
“யார் உலக வாழ்வை விரும்புகிறார்களோ அங்கே அவர்களது செயல்களுக்கான விளைவுகளை நாம் பூரணமாகக் கொடுப்போம். அவர்களுக்கு குறைவேற்படுத்தப் பட மாட்டாது.” (ஸூரா ஹூத் 11:15)
இவ்விரு வசனங்களும் இரண்டு கருத்துக்களை விளக்குகின்றன:
- வானங்கள் பூமியில் உள்ளவை மனிதனுக்குக் கட்டுப் பட்டுப் பணி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஒரு உதாரணம் கடல். அங்கு கப்பலை ஓட விட்டுக் கடலை மனிதன் பணியச் செய்தான். கடலை நன்கு ஆய்ந்து விளங்கிக் கொண்ட போது அதனை எவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்வது என மனிதன் புரிந்து கொண்டான். முற்றிலும் இவ்வாறே பிரபஞ்சப் பொருட்கள் மனிதனின் கட்டுப்பாட்டில் வரக் கூடியவாறே அமைந்துள்ளன. அதனைச் சாதிக்க மனிதனுக்கு அல்லாஹ் அறிவைக் கொடுத்துள்ளான்.
- மறுமையை மறந்து உலகத்திற்காகவென்றே உழைத்தாலும் அத்தகைய மனிதர்களுக்கு அல்லாஹ் உலக விளையைக் கொடுக்கவே செய்கிறான். இதில் இறை நம்பிக்கையாளன், நம்பிக்கையற்றவன் என்ற வேறுபாடு கிடையாது.
ஜப்பான் இவ்விரு வசனங்களின் பொருளின் படி மிகச் சரியாக இயங்கியது. அதன் காரணமாக வளமற்ற நிலத்தில் பல அபாயங்களுக்கு மத்தியில் வாழ்ந்த போதும் ஜப்பான் மக்கள் உன்னத நிலையில் வாழ்கிறார்கள்.
அழிவுகள், அனர்த்தங்களின் போதெல்லாம் பௌதீக வாழ்வொழுங்கில் நாம் என்ன தவறு விட்டோம்; ஒரு முறை அழிவால் பாதிக்கப்பட்டால் அடுத்த முறை எம்மைக் காத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்ற சிந்தனை எமக்கு மிக அடிப்படையானது. அதாவது பௌதீக உலகை வசப் படுத்திக் கொள்ளல், கட்டுப் படுத்தி எமக்கு பணி செய்யுமாறு ஆக்கிக் கொள்ளல் எவ்வாறு என்ற அறிவு உலக வாழ்வின் போது மிக அடிப்படையானதாகும்.
உலக வாழ்வு ஒரு சோதனை. இவ்வுலகம் கஷ்டங்கள், துன்பங்களோடு ஓடும் இயல்பைக் கொண்டது. நோய்கள், செவிடு, குருடு, முடம் என்பவை போன்றதுதான் இந்த அனர்த்தங்களும், அழிவுகளும் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.