முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவாடல் (2)
“ஜிஹாத்” என்ற கருத்து மிகப் பிழையாக விளங்கப்பட்ட இஸ்லாமியக் கருத்துக்களில் ஒன்று. ஆயுத போராட்டம் சம்பந்தமாக அல்குர்ஆனில் வரும் சில வசனங்கள் அவ்வாறு ஜிஹாத் என்ற கருத்துப் பிழையாகப் புரியப்படக் காரணமாயின. அவ்வசனங்களில் மிகப் பிரதானமான ஒன்றைக் கீழே தருகிறோம்.
ஸூரா தவ்பா 09-05
“போர் செய்யத் தடை செய்யப்பட்ட அந்த நான்கு மாதங்களும் கழிந்து விட்டால் இறைவனுக்கு இணைவைப்போரை எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள். அவர்களைச் சிறை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். எல்லா இடங்களிலும் அவர்களைக் கண்காணியுங்கள். அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெரும் கருணை கொண்டவனாகவும் உள்ளான்.”
இந்த வசனம் இணை வைத்து வணங்கும் அனைத்து சமூகங்களையும் குறிக்குமா? முஸ்லிம்கள் ஒரு நாட்டின் மீது அதிகாரம் பெற்றார்களாயின் இவ் வசனம் கூறும் நடவடிக்கைக்கு வருவார்களா என்ற கேள்விகள் இவ்வசனத்தை வாசிக்கும் போது ஏற்பட முடியும்.
ஆனால் நடைமுறையில் முஸ்லிம்கள் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என வரலாறு சொல்கிறது. இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அடுத்து ஆட்சிக்கு வந்த அவர்களது தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), காலத்தில் இவ்வாறு நடக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக பாரசீகர்களை உமர் (ரலி) காலத்தில் முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். பாரசீகர்கள் நெருப்பை வணங்குபவர்கள். அதாவது இணைவைத்து வணங்குவோர். ஆனால் பாரசீகர்கள் மீது இந்நடவடிக்கைகளை முஸ்லிம்கள் எடுகக்கவில்லை என்பதே வரலாறு.
தொடர்ந்து உமையா, அப்பாஸிய, உஸ்மானிய அரசுகளின் போதும் ஏதாவதொரு சமூகத்திற்கு நான்கு மாதங்கள் காலக்கெடு கொடுத்து அக்கால இடைவெளியில் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதாகவோ அல்லது இஸ்லாத்தைத் தழுவாத போது அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவோ வரலாறு கிடையாது.
இந்நிலையில் இந்த வசனத்தை அதன் நேரடிக் கருத்தோடு பொதுமைப் படுத்திப் புரிந்து கொள்ளல் தவறு என்பது தெளிவாகிறது. இப்போது இவ்வசனத்தைப் புரிந்து கொள்ள முயல்வோம். முதலில் இந்த ஒரு வசனத்தை மட்டும் நோக்காது அதற்கு முன்னாலும் பின்னாலும் உள்ள வசனங்களையும் இணைத்துக் கொள்வோம். அப்போதுதான் அது சொல்ல வரும் கருத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளல் சாத்தியமாகும். அதற்கு முன்னாலும் பின்னாலும் உள்ள வசனங்கள் கீழ்வருமாறு
ஸூரா தவ்பா
- நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இணைவைப்பாளர்களுக்கு அவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் விலகிக் கொண்டனர் என்று விடுவிக்கப்படும் அறிவிப்பாகும் இது.
- நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் நடமாடித் திரியலாம். ஆனால் அல்லாஹ்வை நீங்கள் இயலாமல் செய்து தப்பித்துக் கொள்ள முடியாது. நிச்சயமாக அல்லாஹ் தூதின் எதிர்ப்பாளர்களை இழிவு படுத்துவான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
- மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சார்பில் விடுக்கப்படும் அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் நிச்சயமாக விலகிக் கொள்கின்றனர். நீங்கள் பாவமன்னிப்புக் கேட்டு மீள்வீர்களாயின் அது உங்களுக்கே சிறந்தது. நீங்கள் புறக்கணிப்பீர்களாயின் நீங்கள் அல்லாஹ்வை இயலாமல் செய்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நபியே தூதின் எதிர்ப்பாளர்களுக்கு வேதனைதரும் தண்டனை உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
- ஆனால் உங்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட இணைவைப்பாளர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் எக்குறைபாடும் செய்யாது, உங்களுக்கு எதிராக யாருக்கும் உதவி செய்யாதும் இருந்திருப்பார்களானால் அத்தகையவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்களது உடன்படிக்கைகளை உரிய தவணை வரையில் நிறைவேற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறைபய உணர்வு கொண்டவர்களை நேசிக்கிறான்.
- போர் செய்யத் தடை செய்யப்பட்ட அந்த நான்கு மாதங்களும் கழிந்து விட்டால் இறைவனுக்கு இணைவைப்போரை எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள். அவர்களைச் சிறை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். எல்லா இடங்களிலும் அவர்களைக் கண்காணியுங்கள். அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெரும் கருணை கொண்டவனாகவும் உள்ளான்.
- இணைவைப்போரில் யாரேனுமொருவர் உம்மிடம் பாதுகாப்புத் தேடி வந்தால் இறை வார்த்தையைக் கேட்க அது காரணமாகலாம் என்பதால் அவருக்கு பாதுகாப்புக் கொடுப்பீராக. பிறகு அவரை அவரது பாதுகாப்பிடத்தில் சேர்த்து விடுவீராக. அஃதேனெனில் அவர்கள் அறியாத சமூகத்தினராய் உள்ளனர்.
- இணை வைப்போருக்கு அல்லலாஹ்விடமும் அவனது தூதரிடமும் எவ்வாறு உடன்படிக்கையொன்றிருக்க முடியும்? எனினும் மஸ்ஜிதுல் ஹராம் – மக்காவின் புனித கஃபா – அருகில் யாருடன் நீங்கள் உடன்பாடு செய்து கொண்டீர்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு அவர்கள் உங்களோடு நேர்மையாக நடந்து கொள்ளும் வரையில் நீங்களும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறைபய உணர்வு கொண்டவர்களை நேசிக்கிறான்.
- எவ்வாறு அவர்களுடன் உடன்படிக்கை வைத்துக் கொள்ள முடியும்? அவர்களோ உங்களை வெற்றி கொண்டு விட்டால் உறவு முறையையோ ஒப்பந்தம் என்ற பொறுப்பையோ கவனத்திற் கொள்ள மாட்டார்கள்.இவ்வாறு தொடர்ந்து ஆயுதப் போராட்டத்திற்கான காரணத்தை விளக்கிக் செல்லும் ஸுரா இறுதியில் கீழ்வருமாறு கூறி இக்கருத்தை முடிக்கிறது :
- உடன்படிக்கைகளை முறித்து வந்தோர், இறை தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற முயன்றோர் – இவ்வாறு போரைத் துவங்கி வைத்தவர்கள் அவர்களாக இருக்கையில் அத்தகைய சமூகத்தினருடன் நீங்கள் போர் புரியக் கூடாதா?
இந்த வசனங்களைத் தொடராகக் கவனமாக வாசிக்கும் போது முஸ்லிம் அல்லாதவர்களை அவர்கள் எந்நிலையில் இருந்த போதிலும் அழித்தொழியுங்கள் எனக் கூறும் வசனங்களாக அவற்றைக் கொள்ள முடியாதென்பது தெளிவு. இவ்வசனங்கள் விளக்கவரும் கருத்தைத் தெளிவாகப் புரிய முற்படுவோம்.
(1) ஒரு முஸ்லிம் அல்லாதவன் அவன் முஸ்லிம் அல்லாதவன், அல்லது இணைவைப்பாளன் என்பதற்காக மட்டுமே கொல்லப் படவேண்டும் என இவ்வசனங்கள் கூறவில்லை.
“உடன்படிக்கை செய்துகொண்டோர் விதிவிலக்காகிறார்கள்” என்ற கருத்தை 4ம் வசனமும், 7ம் வசனமும் சொல்கின்றன. உடன்படிக்கையை அதன் தவணை வரும் வரை நிறைவு செய்யுங்கள் என 4ம் வசனமும், 7ம் வசனம் “அவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளும் வரை நீங்களும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்” எனச் சொல்கிறது. இந்த வகையில் இவ் வசனங்கள் இறை நிராகரிப்பாளன் நிராகரிப்பு என்ற ஒரே காரணத்திற்காகக் கொல்லப் படுவதில்லை என உணர்த்துகின்றன.
இன்னொரு வசனம் இக் கருத்தை மிகத் தெளிவாகச் சொல்கிறது. அது 6ம் வசனமாகும். அவ்வசனம் ஒரு இணை வைப்பாளர் பாதுகாப்புக் கேட்டு வந்தால் கொடுக்க வேண்டுமெனவும் பிறகு அவரை அவரது பாதுகாப்பிடத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டுமெனவும் கூறுகிறது. ஓரு மனிதனை அவன் முஸ்லிம் அல்லாதவன், இணை வைத்து வணங்குபவன் என்பதற்காக மட்டுமே கொல்வதாயின் பாதுகாப்புக் கொடுத்தல் பாதுகாப்பிடத்தில் கொண்டு சேர்த்தல் என்ற கருத்தைக் கூறும் இவ்வசனங்கள் பொருளற்றவையாகும்.
(2) 13ம் வசனம் போர் புரிவதற்கான காரணத்தை விளக்கும் போது உடன்படிக்கை முறித்து வரல், நபியை நாட்டை விட்டு வெளியேற்ற முயன்றமை என்பவற்றைக் கூறியதே தவிர இறை தூதை நிராகரித்தமை, இணை வைத்து வணங்கியமை. என்ற காரணங்களைக் குறிக்கவில்லை. அத்தோடு அவ்வசனம் “அவர்களே போரைத் துவக்கி வைத்தார்கள்; இறை தூது போராட்டத்தைத் துவங்கி வைக்கவில்லை என்கிறது. “இறை தூதர் (ஸல்) சாத்வீகமாகவே போராடிவந்தார்கள், பகுத்தறிவு ரீதியான உண்மைகளை முன் வைத்து ஆதாரபூர்மாகப் பேசுவதே அல் குர்ஆனின் சாதராண அடிப்படைப் போக்காக இருந்தது நீங்கள் தான் யுத்தத்தை எம் மீது திணித்தீர்கள்” என்பதுவே இதன் பொருளாகும்.
இவ்வாறு ஸூரா தவ்பாவின் இந்த 5வது வசனம் யுத்தத்தை இறைதூதின் மீது திணித்தோரைப் பற்றிப் பேசுகிறதே தவிர ஒட்டு மொத்த முஸ்லிம் அல்லாதவர்கள் மீது படையெடுத்தல் பற்றிப் பேசவில்லை என்பது தெளிவாகிறது.
அல் குர்ஆனின் வசனங்கள் எல்லாக் காலத்திற்கும், எல்லா நிலத்திற்கும் உரியது என்பது உண்மை. ஆனால் அந்த வசனங்களைப் பொதுமைப் படுத்த முன்னால் அவ்வசனங்கள் எப் பின்னணியில் நின்று பேசுகின்றன என்பதனை தெளிவாகப் புரிய வேண்டும். இந்த வகையில் இவ்வசனங்கள் சாத்வீகமாகப் போய்க் கொண்டிருந்த பிரச்சாரத்தை ஆயதப் போராட்டமாக மாற்றியோர் பற்றியும். உடன்படிக்கைகளை மதிக்காது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றை முறித்து ஆயுதத்தைத் தூக்குவொர் பற்றியுமே பேசுகிறது. அவ்வாறில்லாவிட்டால் இணைவைப்பாளர் பாதுகாப்புக் கேட்டால் அவருக்கும் பாதுகாப்புக் கொடுத்தல் என இந்த வசனங்களில் ஒன்று பேசலுக்கு அர்த்தமில்லாது போய்விடும். வசனங்களின் இந்த ஓட்டத்தைப் புரிந்த பின்னரே இவ்வசனத்தின் நடை முறையோகம் பற்றிப் புரிய வேண்டும்.
அடுத்தமுறை இவ்வசனங்களின் இன்னொரு பக்கத்தை நோக்குவோம்.