முஸ்லிம் அல்லாதவர்களுடன் உறவாடல்
முஸ்லிம் அல்லாத சமூகங்களுடனான தொடர்பை அல்குர்ஆன் எவ்வாறு விளக்குகிறது என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயம் போல் தோற்றமளிக்கிறது. அல்குர்ஆனில் அங்காங்கே காணப்படும் சில வசனங்களை எடுத்துக் காட்டி முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களுடன் “யுத்தம்” என்ற தொடர்பையே கொண்டுள்ளனர்; முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் நம்பிக்கை, நாணயம், விசுவாசத்தோடு அவர்கள் உறவாட மாட்டார்கள் என்ற கருத்தே கட்டமைக்க முயலப்படுகிறது.
முஸ்லிம்கள் அடிப்படையில் வன்முறையாளர்கள், அவர்கள் அடுத்தவர்களோடு நம்பிக்கையோடும், விசுவாசமாகவும் உறவாட மாட்டார்கள். அப்படி உறாவடினால் அது அவர்களது பாதுகாப்பை நோக்காக் கொண்ட போலி, தற்காலிக நடவடிக்கையாகவே இருக்குமென முஸ்லிம் அல்லாதவர்கள் நம்புகிறார்கள். உண்மையாகவே நியாயமான காரணங்கள் அதற்கு உள்ளன. அதிலொன்று குறிப்பிட்ட சில அல்குர்ஆன் வசனங்களை விளக்கிய முறை. இரண்டாவது முஸ்லிம்களில் ஒரு சாரார் வன்முறையாளர்களாக உலகில் பல பாகங்களில் இயங்குகின்றமை. அல்காயிதா இயக்கமும், ISISஉம், போகோ ஹராமும் இதற்குச் சிறந்த உதாணங்களாகும்.
இக்கருத்து உண்மைதானா என எப்பக்கச் சார்புமின்றி ஆராய்வதையே இங்கு நோக்கமாகக் கொள்கிறோம். முஸ்லிம்கள் அடிப்படையில் பின்பற்றும் அல்குர்ஆனும், ஸுன்னாவும் அவர்களை வன்முறையாளர்களாக மாற்றுகிறது எனக் காணின் அல்லது அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் விளக்கும் தகுதி படைத்த இஸ்லாமிய சட்ட அறிஞர்களும், சிந்தனையாளர்களும் இஸ்லாத்தை வன்முறை மார்க்கமென வடிவமைத்து விளக்குகிறார்களாயின் அது பற்றி நாம் நிறைய சிந்திக்க வேண்டியவர்களாகிறோம்.
இந்த விடயத்தையே நாம் இங்கு ஆய்வுக்குட்படுத்த விரும்புகின்றோம். முதலாவது அந்த ஆய்வின் முன்னர் சில முக்கிய உண்மைகளை கவனத்திற்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.
அல்குர்ஆன் மனிதன் இயற்றும் நூல்களின் அமைப்பைக் கொண்டதல்ல. ஒரு நூல் அது கொண்டுள்ள விடயதானத்திற்கேற்ப பெயரிடப்பட்டிருக்கும். பின்னர் அதன் அத்தியாயங்கள் அவ்விடயதானத்தை விளக்கும் வகையில் தலைப்புக்களைக் கொண்டு தர்க்க ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் அல்குர்ஆனில் இப்போக்கை அவதானிக்க முடியாது. அல்குர்ஆனின் அத்தியாயங்களுக்கான தலைப்புக்கள் வித்தியாசமானவை. இடி, சிலந்தி, இரும்பு, பெண்கள், உணவுத்தட்டு, மகத்தான செய்தி, வெற்றி, உதவி என்றவாறு பல வித்தியாசமான தலைப்புகளை அது கொண்டுள்ளது. அவ்வத்தியாயத் தலைப்புக்கள் அத்தியாயத்தின் உள்ளடக்கத்தைக் காட்டாது. குறிப்ப்பிட்ட அத்தியாயங்களில் வரும் ஒரு சம்பவத்தையோ அல்லது ஆரம்ப வசனங்களில் ஒரு சொல்லையோ பெரும்பாலும் கொண்டிருக்கும்.
அல்குர்ஆனின் அத்தியாயங்கள் வணக்க வழிபாடுகள், நம்பிக்கைகள், குடும்ப வாழ்வு என்றிவ்வாறான தலைப்புக்களைக் கொண்ட அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு அவற்றை முழுமையாக விளக்கும் பண்பைக் கொண்டிருக்காது. விவாக விடுதலை போன்ற ஒரு சிறிய தலைப்பை எடுத்துக் கொண்டால் கூட ஒரு குறிப்பிட்ட ஸுராவில் மட்டும் அதற்கான முழுமையான விளக்கத்தை பெற முடிவதில்லை. அத்தியாயம் அல் பகரா, நிஸா, தலாக், அஹ்ஸாப் போன்ற பல அத்தியாயங்களிலும் வரும் அது பற்றிய வசனங்களைத் திரட்டி ஆராயும் போதுதான் அது பற்றிய தெளிவுக்கு வர முடியும்.
இந்த வகையில்தான் முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவையும் நாம் நோக்க வேண்டும். அது பற்றிய தலைப்பில் தனியான எந்த அத்தியாயமும் அல்குர்ஆனில் இல்லை. எனவே அல்குர்ஆனில் பல இடங்களில் வந்துள்ள வசனங்களையும் திரட்டி ஆராயும் போதுதான் அது பற்றிய சரியான தெளிவுக்கு நாம் வர முடியும். அவ்வாறின்றி குறிப்பிட்ட ஓரிரு இடங்களில் வந்துள்ள அல்குர்ஆனின் வசனங்களை மட்டும் திரட்டினால் முற்றிலும் பிழையான கருத்தையே கொடுக்கும் சந்தர்ப்பம் உள்ளது. அத்தோடு அல்குர்ஆனைப் பொறுத்தவரையில் இது பிழையான ஆய்வு முறையும் கூட.
இந்தப் பின்னணியிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவாடல் சம்மந்தமான விளக்கமொன்றை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கட்டுரைகளில் அல்குர்ஆனின் ஊடாகத் தருவதற்கு முனைகிறோம்.