நாம் எதிர்கொள்ளும் சில பிரதான அபாயங்கள்

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்கள் யாவை என சிந்திக்கையில் அவை வெளி அபாயங்கள் மாத்திரமல்ல, உள் அபாயங்கள் பல இருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.
அவை பற்றி சில விளக்கங்களைத் நோக்குவோம் .

I. ஷீயா என்ற அபாயமான சிந்தனைப் பிரிவு உருவாகி படிப்படியாக வளர்ந்து வருகின்றமை. அது ஓரளவு கிட்டிய எதிர்காலத்தில் ஒரு தனி சமூகமாக மாறும் அபாயம் உள்ளது. அப்போது உள் முரண்பாடு மிகக் கடுமையாக மாறும் சந்தர்ப்பம் நிறையவே உண்டு.

II. அண்மைக் காலமாக இஸ்லாத்திலிருந்து பௌத்த மதம் நோக்கிச் செல்லும் நிலை ஓரளவு அதிகரித்துள்ளது, இது ஒரு அபாய சமிக்ஞையாகும். இதில் பெண்கள் பலர் இருப்பதுவும் அவதானிக்கத் தக்கதாகும்.

III. இஸ்லாத்திற்கு வெளியே சிந்திக்கும் ஒரு பிரிவினர் உருவாகி வருகின்றமை இன்னொரு அபாயமாகும். இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமான அல்குர்ஆன், ஸுன்னாவையும் இவர்கள் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். ஒரு வகை நாஸ்திக, மதச்சார்பின்மை போக்கு என இதனை ஓரளவுக்கு அடையாளப் படுத்தலாம். இவர்கள் சிதறிய தனி நபர்களாகவன்றி ஒரு குழுவாக, கட்டமைப்பாக இயங்கும் நிலைமை தோன்றியுள்ளமை அவதானிக்கத் தக்கதாகும்.

இஸ்லாத்தை நவீன காலத்தில் பொருத்தமற்ற வகையில் முன்வைப்பதுவும், இறுக்கமான சட்டதிட்டமாக அதனை அறிமுகப் படுத்துவதும், பகுத்தறிவு ஏற்க முடியாத வகையில் சில சிந்தனைகளை இஸ்லாம் என்ற பெயரில் விளக்குவதும் இதற்கான பிரதான காரணங்களாகும்.

தீவிர பெண்ணிய சிந்தனைகளை முன்வைபோரும் இதில் அடங்குகின்றனர். இவ்வாறானவர்களும் வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் ஒரு கட்டமைப்பாக மாறியுள்ளமையும் அவதானிக்கத் தக்கதாகும்.

தஃவா இயக்கங்கள், சட்டக் கருத்து வேறுபாடுகள் என்ற எமது உள்முரண்பாடுகளை விட இவை மிகவும் அபாயகரமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றின் வளர்ச்சி சமூகத்தையே சின்னாபின்னப்படுத்தி குழப்பி மிகவும் பலவீனப்படுத்திவிடும். அது வெளி அபாயங்களை எதிர் கொள்வதில் எம்மை மிகவும் பலவீனப்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கான தீர்வு இவர்களுடனான சுமூகமான ஆழ்ந்த விரிந்த கலந்துரையாடலேயாகும். அதற்கு இஸ்லாத்தை விஞ்ஞானபூர்வமாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் முன்வைக்கத் தெரிய வேண்டும். அத்தோடு சமூக வாழ்வு சம்பந்தமான இஸ்லாத்தின் கொள்கைகள், சட்டதிட்டங்களை சமகால பிரச்சினைகள்,யதார்த்தங்களுக்கேற்ப முன்வைக்கும் சிந்தனைப் போக்கும் அடிப்படையானது.

எமது சமூகத்தின் இத்தகைய அபாயகரமான நிலைகளை சற்றுக் கவனமெடுத்து ஆழ்ந்து நோக்குவதும், அவற்றை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்வதும் இன்றைய காலத்தின் தேவையாகும்.

Reply