இயற்கை அழிவுகளும், வாழ்வு என்ற கருத்தும்
இலங்கையின் பல பாகங்களிலும் பெய்து வரும் கடும் மழையால் பல கடும் சேதங்கள் நடந்து வருகின்றன. உயிரிழப்பு, பொருளிழப்பு, வீடிழப்பு என மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந் நிலையில் அல்லாஹ் மீதான நம்பிக்கை சிலரைப் பொறுத்தவரையில் ஆட்டம் காண்பதுண்டு. ஏன் தான் இறைவன் இத்தகைய பேரழிவுகளை நிகழ்த்துகிறானோ என்று ஒரு வகை சந்தேகத்தோடும், விரக்தியோடும் பேசுபவர்களை நாம் அவதானிக்கிறோம். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக. இது துன்பங்களின் அதிர்ச்சியால் வரும் வார்த்தைகள்.
இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு உண்மைகளையாகும்.
- இது நிரந்தரமற்ற, சொற்ப கால வாழ்வு. ஏதோ ஓர் அமைப்பில் நாம் மரணிக்கவே போகிறோம். அம் மரணம் எந்தவடிவிலும் வரலாம்.
- இந்த வாழ்வு அமைதியான, அழகான, பிரச்சினைகள் எதுவுமற்ற வாழ்வல்ல. இது ஒரு பரிசோதனையின் வாழ்வு. அந்த பரிசோதனைகள் பல வடிவங்களில் வரலாம். அந்த சோதனைகளின் போதெல்லாம் ஒரு முஸ்லிம் “நாம் இறைவனுக்காகவே உள்ளோம். அவனிடமே திரும்பிச் செல்ல உள்ளோம்” என்றுதான் கூறுவான்.
அதாவது மனிதன் என்பவன் அல்லாஹ்வுக்கானவன். அவனிடமே மீள வேண்டும். உலகத்தின் பொருட்கள், அதிகாரம், கௌரவம், குடும்பம், கட்சி, இயக்கம் என்பவற்றிக்காக மனிதனில்லை.
இந்த மனநிலையோடு ஒரு முஸ்லிம் உலகங்களின் கஷ்டங்கள், துன்பங்களுக்கு முகங்கொடுப்பான். அல்குர்ஆன் பேசுகிறது:
“நிச்சயமாக நாம் உங்களைச் சில வகைப் பயங்களாலும், பட்டினியாலும், செல்வங்கள், உயிர்கள், விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் சோதிப்போம். பொறுமையை மேற் கொளபவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. அவர்கள் தங்களுக்கு ஏதேனும் துன்பங்கள் நேரிடும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அவனிடமே நிச்சயமாக திரும்பிச் செல்வோராக இருக்கிறோம் எனக் கூறுவார்கள். அத்தகையோர் மீது அவர்களது இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும் நல்லருளும் கிடைக்கப்பெறும். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்.” (அல் பகரா: 155,156,157)
இவ் வசனங்கள் வாழ்க்கையின் பொருளை “அல்லாஹ்வுக்காகவே உள்ளோம்” என வரையறுக்கின்றன.
சோதனைகள் வாழ்வின் இயல்பு என்கின்றன.
சோதனைகளை பொறுமையுடன் அதாவது வெற்றிகரமாக எதிர் கொண்டவர்கள் அதி உன்னத இறை வாழ்த்துக்களையும் அருளையும் பெறுகின்றார்கள் என்கின்றன.
இறுதியில் நம்பிக்கையில் எந்தத் தளர்வுமின்றி இத்துன்பங்களை எதிர் கொண்டமையால் நேர் வழியில் அவர்கள் நிலைக்கிறார்கள் என்றும் கூறுகின்றன.
இந்த இறை வசனங்கைளையே துன்பங்களில், அழிவுகளில் விழுந்துள்ள எம் சகோதரர்களுக்கு ஆறுதலாகக் கூறுகிறோம் – எம் நாட்டு சகோதரர்களுக்கும் கூறுகிறோம்.
அழிவுகளுக்கு எமது கவனயீனமும், சீரான திட்டமற்ற எமது பௌதீக வாழ்வொழுங்கும் காரணமாக இருந்து விடக் கூடாது எனவும் வலியுறுத்துகிறோம். இம் முறையில் நாம் பல பாடங்களைக் கற்று அடுத்த முறை எம்மை சீர் படுத்திக் கொள்ளவும் வேண்டுகிறோம். சகோதர்கள் பலர் களத்தில் இறங்கி துன்பமும், துயரமும் பட்டோருக்கு உதவி புரிகிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பலப் படுத்தட்டும்.
துன்பங்கள், துயரங்களில் வாழும் மக்களுக்காக அவர்களின் துன்பங்களை நீக்கக் கோரி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவர்களுக்குக் கைகொடுப்போம்.
உயிரிழப்புக்குட்பட்டோருக்காகவும் பிரார்த்திப்போம்.