தாவூத் ஓகலோ, தையிப் ஒர்தகோன் – இரு ஆளுமைகளின் மோதல்?!
துருக்கியின் பிரதமர் பதவி விலகியமை ஒரு பெரும் நிகழ்வாக பார்க்கப்படுவது இயற்கை. எனினும் தாவூத் ஓகலோ பிரதமராக ஏற்றதிலிருந்து அவருக்கும் ஜனாதிபதி ரஜப் தையிப் ஓர்தகோனுக்குமிடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் இருந்து வந்தமை கட்சியினுள்ளேயும், துருக்கியின் உள்ளேயும் மெதுவாகவே பேசப்பட்டு வந்தது. பலரது தலையீட்டாலும், தாவூத் ஓகலோவே சகித்துச் செல்ல முயன்றமையாலும் பிரிவு தவிர்க்கப் பட்டு வந்தது. பிரதமராகப் பதவியேற்றபோது கட்சியின் மத்திய செயற்குழுவைத் தெரிவு செய்வதில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து இதுவரை கருத்துவேறுபாடுகளை சமாளித்து வந்தாலும். அதனை தொடந்து சாத்தியமற்றதாகி பிரிய வேண்டிய நிலை தோன்றியது.
இரு தலைமைகளுக்குமிடையிலான கருத்து வேறுபாடு கருத்துக்கள், சிந்தனைகள், மூலோபாயத் திட்டங்களில் ஒரு போதும் இருந்ததில்லை. முடிவுகளெடுக்கும் பொறிமுறை, முடிவுகளின் இறுதித் தீர்மாணம் எங்கே அமைய வேண்டும் என்பதாகவே இருந்து வந்துள்ளது. கட்சிக் கிளைகளுக்கான தலைமைத் தெரிவு அதிகாரத்தை தாவூத் ஓகலோ விடமிருந்து ஒர்தகோன் சார்பு கட்சி மத்திய குழு பறித்தது. இதுவே இறுதிக் கறுத்துவேறுபாடு. இதனோடுதான் ஓகலோ விலகும் தீர்மாணத்தை எடுத்தார். உண்மையில் இந்த ஒரு நிகழ்வு அவரது பதவி விலகளுக்கான காரணமன்று. தொடர்ந்து வந்த கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளுமே இதற்கான காரணம்.
இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாட்டிற்கு இரண்டு அடிப்படைக் காரணங்களுள்ளன:
- 1982 அரசியல் யாப்பு. இந்த யாப்பு ஜனாதிபதி, பிரதமர் இருவருக்குமான அதிகாரங்களை நன்கு வரையறுத்துக் கூறவில்லை. பல இடங்களில் இருவரது அதிகாரங்களும் முரண்படும் வகையில் யாப்பு அமைந்து காணப்படுகிறது.
1982லிருந்து துருக்கியின் இவ்விரு தலைமைகளுக்குமிடையில் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளமை வரலாறு. - இரு பெரும் ஆளுமைகளின் மோதல்:
தையிப் ஒர்தகோன் கவர்ச்சிமிக்க பாரிய ஆளுமை. கட்சியின் முதன்மை ஸ்தாபகர். பல சாதனைகளை துருக்கியின் அரசியல் வரலாற்றில் நிறுவியவர்.தாவூத் ஓகலோ ஓர் அரிசியல் கொள்கை வகுப்பாளர். தலை சிறந்த மூலோபாயத் திட்ட சிந்தனையாளர். ஒரு பாரிய அறிவு ஜீவி.
இந்த வகையில் இவ்விரு ஆளுமைகளும் தமக்கென சுதந்திரமான கருத்துக்களையும், முடிவுகளையும் அபிப்பிராயங்களையும் கொண்டிருப்பர். தமது எல்லா சிந்தனைகளையும், அபிப்பிராயங்களையும் கைவிட்டு அடுத்தவர் பின்னால் செல்ல விரும்ப மாட்டார்கள். ஓர் இயக்கம், நிறுவனத்தின் உள்ளே இத்தகைய இரு ஆளுமைகள் ஒன்றிணையும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், அபிப்பிராயங்களை மதித்தல், ஒவ்வொரு ஆளுமைக்கும் இடமளித்தல் என்ற போக்கு காணப்பட வேண்டும். அது ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாத போது இத்தகைய பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவை. இதற்கான இன்னொரு அண்மைக்கால உதாரணம் மலேசிய அன்வர் இப்றாஹீமும், மஹாதீர் முஹம்மதுவுமாகும்.
இஸ்லாமிய அரசியல் வரலாறு, இயக்கங்களின் வரலாறு, பொதுவாக மனித வரலாறு என்பவற்றில் நிறுவனங்கள், இயக்கங்கள் எதிர் கொண்ட மிகப்பெரும் பிரச்சினையும், சிதைந்து பின்னடையக் காரணமாக இருந்ததுவும் இப் பிரச்சினைக்குத் தீர்வில்லாமல் போனமையே. அவ்வாறே இரு பெறும் இயக்கங்கள் ஒன்றிணையத் தடையாக இருப்பதுவும் இப்பிரச்சினையின் காரணமாகவேயாகும்.
தாவூத் ஓகலோவுக்குப் பதிலாக இன்னொரு வரைத் தெரிவு செய்வது மிகப் பெரும்பாலும் இலகுவாக மிகச் சுமுகமாகவே நடந்து முடியும். ஏனெனில் கட்சி அவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் நிறைந்தது.
துருக்கியின் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுப் பலவீனப் பட்டிருக்கும் இந்நிலையில் இந்நிகழ்வு கிட்டிய எதிர்காலத்தில் பெரிய தாக்கம் எதனையும் விளைவிக்காது போக முடியும். கட்சிக்கான மக்கள் ஆதரவு, அதன் கட்டுக்கோப்பான இயக்கம் என்பவற்றால் அது பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நின்று பிடிக்க முடியும்.
ஆனால் இங்கு நாம் அவதானிக்க வேண்டிய சில உண்மைகள் உள்ளன:-
- தாவூத் ஓகலோ ஒரு பெரும் அறிவு ஜீவி. துருக்கி அரசியலின் தத்துவ ஆசிரியர், துருக்கி வெளி நாட்டுக் கொள்கையின் அமைப்பாளர் – இப்படியான பாரிய ஆளுமையின் தேவை எப்போதும் ஒரு நாட்டுக்கு அவசியம். எனவே தாவூத் ஓகலோ ஒதுங்கியமை ஒரு பலமான தாக்கத்தை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன்விளைவை சற்றுப் பிந்தி அவதானிக்கத் தக்கதாக இருக்கும்.
- முன்னால் ஜனாதிபதி அப்துல்லா கோல், கட்சியினதும், அரசினதும் உபதலைவர்களாக இருந்த போலன்ட் அரினீஷ், ஹூசைன் தஷிலிக், துருக்கி பொருளாதார எழுச்சியைக் கட்டியெழுப்பிய அலி பாபாகான் என்போர் ஏற்கனவே கட்சியை விட்டு ஒதுங்கினர். இவர்கள் ஆரம்ப காலத் தலைமைகள். இத்தகையோர்களது இழப்பு மிகப் பாரியது.
தையிப் ஓர்தகோனின் மிகைப் படுத்தப்பட்ட அதிகார மையப் போக்கே இதற்கான பிரதான காரணம். இது தொடர்கையில் கட்சியின் உள்ளே உட்பூசல்கள் தோன்ற இடமுண்டு. விளைவாக கட்சி பலவீனமுற்று உடைந்து போகலாம். சுற்றியுள்ள பல நாடுகள் ஸ்திரமற்று இருக்க ஸ்திரமாக நிலைக்கும் துருக்கியும் தன் ஸ்திர நிலையை இழக்கும். விளைவாக முஸ்லிம்கள் தமக்கிருந்த ஒரு பலமான நாட்டை இழப்பார்கள்.
- சிரியாப் பிரச்சினை, ரஷ்யா உடனான இணக்கமின்மை, குர்டிஸ் தொழிளாலர் கட்சியின் தீவிர செயற்பாடுகள் என சுற்றி பல பிரச்சினைகளுடன் துருக்கி வாழ்கிறது. எதிரிகள் துருக்கியின் மீது எப்போதும் கண்வைத்தே இருக்கிறார்கள். இப்படியான சிக்கல்கள் அவர்களுக்கு நல்ல வாய்ப்பை அளிக்கும். அவர்களும் இப்பிரச்சினைகளினுள்ளே புகுந்து விளையாட வழி தேடுவர்.
இறுதியாக ஒரு கருத்தை முன்வைத்து முடிப்போம்:
இஸ்லாமிய உலகில் உள்ள மிகப் பெரும் பிரச்சினை ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் ஒரே ஒரு இஸ்லாமிய இயக்கம், கட்சி மட்டும் பலம் பெற்றிருப்பதாகும். அடுத்த பலமிக்க சக்தி மதச் சார்பற்றவர்களாகவே உள்ளனர். இந்நிலை மாறி ஏறத்தாழ சம பலமுள்ள இஸ்லாமிய கட்சிகள் தோன்ற வேண்டும். அல்லது முன்ஸிப் மர்ஜூகி போன்ற தலைமைகளை ஒத்த மிகுந்த மிதவாதப் போக்கு கொண்ட மதச் சார்பற்ற சக்திகள் தோன்ற வேண்டும். இத்தகைய சம பல சக்திகளே நாட்டின் சீரான போக்கை தக்கவைத்துக் கொள்ள உதவும். அத்தோடு மிகுந்த அரசியல் விழிப்புணர்வும், அர்ப்பணமும் கொண்ட மக்கள் சக்தி ஒன்று கட்டியெழுப்பப் படவேண்டும். அதாவது சமூகமே அடிப்படை, அரசு அல்ல என்ற கோட்பாடு நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.
அரசியல் வரலாற்றில் நாம் மிக மிக அரிதாகவே அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்ற தலைமைகளை சந்திக்க முடியும்.