இஸ்லாமிய சிந்தனையில் ஏற்பட்டு வரும் அதிர்வுகள் – 2
சட்ட பகுதிகளிலும் பல புதிய சிந்தனைகளும், கண்னோட்டங்களும் எழுந்துள்ளன என்று சென்ற முறை கூறினோம். அதற்கான சில உதாரணங்களைக் கீழே தருகிறோம்.
மனித சுதந்திரம் மிக அதிகமாகப் பேசப்படும் காலப்பிரிவு இது. எனவே சுதந்திர என்ணம் கொண்ட சமூகங்களின் மீது சட்டங்களின் திணிப்பு எந்த வகையிலும் பொருத்தமற்றது.
“மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது”
(ஸூரா பகரா- 2: 256)
என்ற வசனம் இஸ்லாத்தை ஏற்கமுன்னரும், பின்னரும் உள்ள எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். சட்டத்தின் பிடிக்குப் பயந்து செய்யப்படும் செயற்பாடுகளுக்கு அல்லாஹ்விடத்தில் கூலியும் கிடையாது.
இந்த வகையில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கவழிபாடுகளிலும் உடை போன்ற பகுதிகளிலும் மனிதன் பயிற்றுவிக்கப் பட வேண்டுமே தவிர தண்டனைகள் மூலம் நிர்பந்திக்கப்படக் கூடாது. மனிதனின் தனிப்பட்ட விவகாரங்கள் இவ்வாறே நோக்கப்பட வேண்டும்.
சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதியில்தான் தண்டனைகள் என்ற பகுதி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
அதில் குற்றவியல் பகுதியில் காணப்படும் ‘ஹுதூத்’ எனும் வரையறுத்த தண்டனைகள் நவீன காலப்பிரிவில் சர்ச்சைக்கு உரியவைகளாக உள்ளன. ஏனைய சட்டப் பகுதிகள் நடைமுறைச் சட்டங்களோடு உடன்பட்டுச் செல்வதே மிக அதிகம்.
குற்றவியல் சட்டப் பகுதி பற்றி கீழ்வரும் சிந்தனைகள் எழுத்து வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டு வருகின்றன.
- மதம் மாறலுக்கான -ரித்தத்திற்கான- தண்டனை மதம் மாறலோடு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் போதுதான் கொடுக்கப்பட வேண்டும். தனியாக ரித்தத்திற்கென்று தண்டனை கிடையாது. இது சம்பந்தமான அல் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் திரட்டி ஆராயும் போது இந்த முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
- ஹுதூத் சம்பந்தப்பட்ட குற்றம் ஒன்றைச் செய்துவிட்டு பாவமன்னிப்புக் கேட்டல் அத் தண்டனையை நீக்குவதாக அமையும்.
- இக்காலப்பிரிவு சமூக, பொருளாதார, அரசியல் சூழல் ஹுதூத் தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட பொருத்தமற்றவையாகும். அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படல் பல்வேறு அநியாங்களுக்கு இட்டுச் செல்லும். எனவே அவை இடைநிறுத்தப்பட வேண்டும்.
- “மகாஸித் ஷரீஆ” சட்டக் கொள்கை ஆய்வின் அடிப்படைக் கோட்பாடாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறே அரசியல் பகுதி, சிறுபான்மை முஸ்லிம்கள் சார் பகுதி என்பவற்றிலும் பல புதிய சிந்தனைகள் தோன்றி வாதிக்கப்பட்டு வருகின்றன.
இப் புதிய சிந்தனைகள் பல சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தை முன்வைக்கப் பங்களிப்பு செய்ய முடியும். அத்தோடு எமது சிறுபான்மை வாழ்வமைப்பை ஒழுங்குபடுத்துவதிலும் பங்களிப்பு செய்ய முடியும். இந்த வகையில் இவற்றை ஆய்வதிலும், படிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
இது முஸ்லிம் சமூகம் தன்னை மீள் புணரமைத்துக் கொள்ளும் பகுதி. ஒரு போதும் அக்கால சூழ்நிலைக்குத் தக அமைக்கப்பட்ட எமது சிந்தனைப் பாரம்பரியம் எமக்குப் பொருத்தமாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது.
இந்தப் பின்னணியிலிருந்து இப் பிரச்சினையை அணுக வேண்டும்.