துருக்கி தேர்தல் முடிவுகள் – புரிய வேண்டிய உண்மைகள்
மீண்டும் ஒரு முறை துருக்கியின் நீதிக்கும், அபிவிருத்திற்குமான கட்சி எதிர்பாராதளவு பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. அந்த வெற்றி மக்களின் பாரிய பங்களிப்போடு கிடைத்த வெற்றியாகும். தேர்தலை மக்கள் புறக்கணித்து கிடைத்த வெற்றியன்று. என்றுமில்லாதவாறு மக்கள் பாரியளவு தேர்தல் செயற்பாட்டில் கலந்து கொண்டு கிடைத்த வெற்றி அது. 85% க்கும் அதிகமாக மக்கள் இம்முறை வாக்களித்துள்ளனர். எனவே இது முழுமையாக மக்களின் தெரிவு.
முதலில் தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம். 16 கட்சிகள் தேர்தலில் கலந்து கொண்டாலும் நான்கு கட்சிகளே அங்கு முதன்மையானவை. எனினும் அவை தமக்கு மத்தியில் கடும் முரண்பாடுகள் கொண்டவை.
1. நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி – 49.5% வாக்குகள்
2. மக்கள் கட்சி – 25% வாக்குகள்
3. துருக்கிய இனத்திற்கான கட்சி – 12% வாக்குகள்
4. ஜனநாயக மக்கள் கட்சி – 10.5% வாக்குகள்
இத்தேர்தல் வெற்றி எமக்கு சொல்லும் உண்மைகள் கீழ்வருமாறு:
நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி சென்ற தேர்தலில் 41% வீத வாக்குகளையே பெற்று வெற்றி அடைந்திருந்தது. அப்போது அதனால் கூட்டுச் சேராது தனியாக ஆள முடியாத நிலை இருந்தது. ஆனால் இம்முறை 49.5% வாக்குகளைப் பெற்று 317 ஆசனங்களை அடைந்து தனியாக ஆட்சி செய்யும் நிலைக்கு வந்ததுள்ளது.
அதற்கு அடுத்த தரத்திலுள்ள கட்சி சென்ற தேர்தலிலும் இதே வீத வாக்குகளைப் பெற்று தன்னைக் காத்துக் கொண்டது. PKK என்ற அம்மக்கள் கட்சி கமால் அத்தாதுர்கால் உருவாக்கப் பட்டது. 1923இல் இருந்து 1950 வரை 27 வருடங்கள் தனியாக நாட்டை ஆட்சி செய்தது. தீவிர மதத் சார்பற்ற கட்சியாகிய இது தன்னுள்ளே மதச் சார்பற்றோர், இடது சாரிகள், லிபரல் சிந்தனைப் போக்கு கொண்டோர் என்போரை அடக்கியுள்ளது. துருக்கியில் குறிப்பாகக் கரையோரப் பகுதிகளில் மேற்கத்தியமயப் பட்ட சமூகமொன்று வாழ்கிறது. அவர்களே இக்கட்சியின் மூலதனமாகும்.
நீதிக்கும், அபிவிருத்திக்குமான தையிப் ஒர்தகோனும், அவர்கள் சார்ந்தோரும் உருவாக்கிய கட்சி 13 வருட காலங்களாக துருக்கியை ஆள்கிறது. இந்த அரசியல் போக்குக்கான பின்னணி கீழ்வருமாறு:
அ) துருக்கிய சமூக மனநிலை, சமூக அடிப்படை துருக்கிய மக்கள் ஆழ்ந்த இஸ்லாமியப் பற்றுள்ளவர்கள் என்பதுவாகும். அவர்கள் பல நூற்றாண்டு காலமாக இஸ்லாமிய உலகை ஆண்டவர்கள். இவர்களை மதச் சார்பற்றவர்களாக மாற்றுவது ஒருபோதும் சாத்தியமில்லை. இந்தத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் மக்கள் பெரும் தொயைினர் கட்சித் தலைமையகம் முன்னே ஒன்று திரண்டனர். தாவூத் ஓகலோ அப்போது நீண்டதொரு உரையாற்றினார். ஜனாதிபதி மாளிகை முன்னாலும் மக்கள் பெருந்தொகை ஒன்று கூடியது. ஆனால் ஒர்தகோன் மக்களை நோக்கி எதுவும் பேசவில்லை. அவர் ஸுபுஹு தொழுகைக்காக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) ஸஹாபி அடங்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையிலுள்ள பள்ளி சென்று தொழுகையை நிறைவேற்றினார். மக்களுக்கு அவர் சொன்ன செய்தி இதுவே. இந்த மனநிலைமீது எழுந்ததுவே இக்கட்சி.
அத்தோடு இக்கட்சி இஸ்லாத்தை நவீன சர்வதேசிய சூழல், மக்கள் மனநிலை என்பவற்றிக்கேற்ப வடிவமைத்துக் கொண்டது. இப்பகுதியிலேயே நஜிமுத்தீன் அர்பகான் தவறுவிட்டார். எனவே அவரால் பாரிய வெற்றிகள் எதனையும் சாதிக்க முடியவில்லை.
துருக்கியை ஆண்ட மதச்சார்பற்ற சிந்தனைப் போக்கு கொண்டோரில் மிகப் பெரும்பாலோர் தூய வாழ்வையும், சுத்தமான கைகளையும், வெளி நாட்டு சக்திகளுக்கு ஏதோ ஒரு வகையில் விலை போகாதவர்களாகவும் இருக்கவில்லை.
தொடர்ந்த குர்டிஷ் போராட்டத்தை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிக்க முனைந்து ஓரளவு அதில் வெற்றிகண்டவர் தையிப் ஒர்தகோனே. அவர்களுக்கு என்றும் கிடைக்காத சில உரிமைகளையும், சலுகைகளையும் கொடுத்தவர் அவரே. இந்நிலையில் குர்டிஷ் சமூகத்தில் இக் கட்சிக்கு ஓரளவான ஆதரவு இருப்பதையும் காண முடியும். ஜனநாயகக் கட்சி துருக்கி குர்டிஷ்மக்கள் சார்பு கட்சியாகும். அது இம்முறை தேர்தலில் பின் வாங்கியுள்ளமை இக்கருத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. 13% இல் இருந்து 10.5% விகிதத்திற்கு அது இறங்கியது.
நீதிக்கும் , அபிவிருத்திக்குமான கட்சியின் சென்ற ஆட்சியின் இறுதி காலப் பிரிவுகளில் சில விமர்சனங்களும், குழப்ப நிலைகளும் எழுந்தன. அவற்றில் உண்மைகள் பலவும் இருந்தன. இந் நிலையில் கட்சி சில திருத்தங்களைச் செய்தமையை அவதானிக்க முடிந்தது.
- பாரிய துருக்கி என்ற தையிப் ஒர்தகோன் இறுதி காலப்பிரிவுகளில் பேசிய வேலைத்திட்டங்கள் பின்னே கொண்டு செல்லப்பட்டன. மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் கவனத்திற்கொள்ளப்பட்டன. கட்சித் தலைவர் அவற்றையே அழுத்திப் பேசினார்.
- கட்சியின் வேட்பாளர்களாக புதிதாகப் பலர் தெரிவு செய்யப் பட்டனர். குறிப்பாக குர்டிஷ் பகுதியிலும் மக்களாதரவு கொண்ட பல முகங்கள் முன்னே கொண்டு வரப்பட்டன. கட்சியின் சில தலைமைகள் குறித்து ஏற்கனவே எழுந்த விமர்சனங்களை மீள் பரிசீலனை செய்ததாக இது அமைந்தது.
கட்சி எதிர்காலத்தில் சாதிக்கப் போபவைகள் யாவை:
- தேர்தல் முடிந்ததுமே லீராவின் பெறுமானம் 1.5% த்தால் கூடியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்து பொருளாதார பலமிக்க நாடாக துருக்கியை தொடர்ந்தும் கட்சி கட்டி எழுப்புவது கட்சியின் முதன்மைப்பட்ட நோக்கம்.
- யாப்பு மாற்றமொன்றை கொண்டு வருவது கட்சியின் ஒரு நோக்கம். அதற்கான முயற்சியில் கட்சி ஈடுபட முனையும். எனினும் இது மிகச் சிரமமாகவே இருக்கப் போகிறது. ஏனெனில் யாப்பு மாற்றத்திற்கு 367 ஆசனங்கள் தேவை. கட்சி பெற்றிருப்பது 317 ஆசனங்களே. இந் நிலையில் அடுத்த கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். அவ்வொத்துழைப்பை அடுத்த கட்சிகள் கொடுப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை.
- ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கான சாத்தியப்பாடுகள் நிறைய உள்ளன. சில ஐரோப்பிய நாடுகள் அதற்கான வரவேற்பையும் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய ஆலோசகர் அங்கோலா மிரக்கீன், தையிப் ஒர்தகோனை தேர்தலுக்கு சற்று முன்னர் சந்தித்துமுள்ளார்.
- வெளிநாட்டுக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழப் போவதில்லை. பலஸ்தீன், சிரியா போன்ற பிரச்சினைகளுடனான துருக்கியின் நிலைப்பாடு பெரும்பாலும் அப்படியே இருக்கப் போகிறது.
இஸ்லாமிய உலக அரசியலின் இரு உண்மைகள்
- இஸ்லாமிய உலகின் தலைவர்களில் முஸ்லிம் விவகாரங்களில் மிகுந்த உறுதியோடு ஈடுபாடு காட்டுபவர் தையிப் ஒர்தகோனே. அரபு எழுச்சியோடு ஒத்துழைத்தவர், இஸ்லாமியவாதிகளோடு உடன்பட்டுச் செல்பவரும் அவரே. இந்தவகையில் இஸ்லாமிய உலகு, குறிப்பாக அரபுலகு இருக்கும் ஒரு சிக்கலான நிலையில் நம்பிக்கையோடு நோக்கத் தகுந்தவர் தையிப் ஒர்தகோன்.
- தையிப் ஒர்தகோன் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவரது கட்சியின் சில தலைமைகள் மீதும் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றச் சாட்டுகளும், விமர்சனங்களும் முழுக்க, முழுக்க பொய்யானவை அல்ல. அவற்றில் உண்மைகள் சில உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் நாம் சிந்திக்க வேண்டிய ஒழுங்கு குறித்து இங்கு சில உண்மைகளை முன்வைப்போம்:
தனி மனிதர்கள் மீதும் குறிப்பிட்டதொரு கட்சியின் மீதும் நம்பிக்கை வைப்பது எப்போதும் அபாயகரமானது. ஏனெனில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்ற அதியுயர் ஒழுக்கப் பண்பாடும், சாதிக்கும் திறமையும் கொண்டவர்கள் வரலாற்றில் வெகு சொற்பமாகவே தோன்றுவர். இந்நிலையில் தனி மனிதர்களிலும், கட்சி ஒன்றிலும் பிறழ்வுகள் ஏற்படுவது மிகவும் சாத்தியம். அந்நிலையில் முழு நம்பிக்கையீனத்தில் விழுந்து விரக்தி மனப்பாங்கு கொள்ளல் இஸ்லாத்தைப் பற்றிய நம்பிக்கையிழத்தல் போன்ற பெருத்த அபாயங்கள் தோன்ற முடியும்.
இந்நிலையில் சமூகத்தின் கட்டமைப்பு, அதன் உள்ளே அமைய வேண்டிய நிறுவன ரீதியான இயங்கு முறை பற்றி கவனம் செலுத்த வேண்டும். சகல ஆற்றல்களும், ஒருங்கே அமைந்த வெற்றி வீரனைத் தேடி வீர வணக்கம் செலுத்தும் நிலை ஒருபோதும் பொருத்தமானதல்ல. அது சமூகத்தில் தோன்றுவது மிகவும் அபாயகரமானது.
இப்போதைய அரபு, இஸ்லாமிய உலக நிலை.
மக்கள் ஆழ்ந்த இஸ்லாமியப் பின்னணி கொண்டவர்களாக இருப்பதால் தேர்தல்களின் போது இஸ்லாமியக் கட்சியே வெல்லும் சூழலுள்ளது. தீவிரவாதப் போக்குக் கொண்ட மதச் சார்பற்ற கட்சிகள் வெற்றியடையும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. இஸ்லாமியக் கட்சிக்கான தொடர்ந்து வரும் அந்த வெற்றி அவர்களை நிலை தடுமாறச் செய்யும். அப்போது அவர்கள் பயங்கரத் தவறுகளை விடுவர். விளைவாக மக்கள் இஸ்லாமியவாதிகளை விட்டு வெளியே செல்வர்.
இந்நிலையில் இஸ்லாமியப் போக்கு கொண்ட பல கட்சிகள் இருப்பதுவே நல்ல தீர்வாக அமைய முடியும். அரபு, இஸ்லாமிய உலகின் தற்போதைய சிக்கல் ஏதோ ஒரு இஸ்லாமிய இயக்கம் அல்லது கட்சி அதி கூடிய செல்வாக்குப் பெற்றுள்ளமையாகும். பல இஸ்லாமியக் கட்சிகள் அல்லது அவற்றோடு இணைந்து மிதவாதப் போக்கு கொண்ட மதச் சார்பற்ற கட்சிகள் ஏறத்தாழ சம பலம் கொண்ட கட்சிகளாக அமையுமாயின் அரசியலில் ஓர் ஆரோக்கிய சூழல் ஏற்படும் சந்தர்ப்பமுண்டு. ஆட்சிக்கு வரும் இஸ்லாமியப் பின்னணி கொண்ட கட்சிகள் இதற்கு இடமளிக்கும் வகையில் தமது போக்கைக் அமைத்துக் கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய உலகுக்கு மட்டுமன்றி சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளதல் அவசியம்.