மஸ்ஜிதுல் அக்ஸாவுக்காகப் பிரார்த்தனையாவது செய்வோமா?
பலஸ்தீன் மிகப் பாரிய கொதிப்பு நிலையை அடைந்துள்ளது. ஒரு மாதகாலமாக மிகப் பாரியதொரு போராட்டம் அங்கு நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு கிழமையாக பலஸ்தீன் அனைத்துப் பிரதான நகர்களும் கொதித்தெழுந்துள்ளன.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புதான் பலஸ்தீனின் இத்தகைய தீவிர நிலைக்கு அடிப்படைக் காரணம் அந்த ஆக்கிரமிப்பு இடைக்கிடை சில தீவிர நிலைப்பாடுகளை எடுக்கிறது. அப்போது பலஸ்தீனியர்களும் வேகமான போராட்டத்தில் குதிக்கிறார்கள்.
இப்போதைய போராட்டத்தின் உடனடிக்காரணம்:
மஸ்ஜிதுல் அக்ஸாவை கால – இட ரீதியாக பலஸ்தீனியர்களுக்கும், யூதர்களுக்கும் மத்தியில் பிரிக்க முற்படும் நிலையாகும். அடிக்கடி அரச பாதுகாப்புடன் யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவினுள்ளே பலவந்தமாக நுழைய முற்படுகிறார்கள். அப்போது எழுகிறது போராட்டம். மஸ்ஜிதுல் அக்ஸாவை நீக்கிவிட்டு ஸுலைமான் கோயிலை அமைக்க விரும்பும் இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு கட்டமே இதுவாகும்.
இஸ்ரேலிய பிரபல நாவலாசிரியர் எப் யஹூஷஃ என்பவர் பலஸ்தீனியர் போராட்டக் காரணத்தைக் கீழ்வருமாறு வர்ணிக்கிறார்:
“பலஸ்தீனியர்கள் நோர்வையினர் போன்று மிக அமைதியான உணர்வு கொண்டிருந்தாலும், வாழ்வை ஆழ்ந்து விரும்பும் பிரேஸிலியர் போன்றிருந்தாலும் தமது அந்த பண்புகளை உதறிவிட்டு எழும்பும் நிலையே உள்ளது.”
பலஸ்தீனியர்கள் வாழும் சூழலை கீழ்வருமாறு சுருக்கமாகத் தரலாம்:
அவர்கள் மூன்று சட்ட ஆதிக்கத்தின் கீழ் வருகிறார்கள்:
i. இஸ்ரேலிய காலனித்துவ ஆதிக்கக் கட்டமைப்பு
ii. மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்களுக்கான தனியான சட்ட ஒழுங்கு, பலஸ்தீனியர்களுக்கான சட்ட ஒழுங்கு என்ற இனப்பாகுபாடு.
iii. தனி ஆட்சி சம்பந்தமான சட்ட ஒழுங்கு.
நிலத்தை பொறுத்த வரையிலும் ஓர்ஸலோ ஒப்பந்தத்தோடு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள்:
i. பலஸ்தீன் அரச ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி.
ii. பலஸ்தீன் அரசுக்கும் (பெயரளவில்) யதார்த்தத்தில் இஸ்ரேலிய அரச ஆதிக்கத்திற்கும் உட்பட்ட பகுதி.
iii. இஸ்ரேலிய அரச ஆதிக்கத்திற்கு மட்டும் உட்பட்ட பகுதி. மேற்குக்கரையில் மிகப் பெரும் பகுதி இதில் அடங்குகிறது.
பலஸ்தீனின் இப்போதைய போராட்ட நிலை செல்லும் போக்கைப் பார்க்கும் போது மூன்றாவது “இன்திபாலா” ஒன்றை அது உருவாக்கி விடலாம் எனக் கருத முடிகிறது.
தற்போதைய போராட்ட நிலையின் பொதுப் பண்பு எந்த இயக்கச் சார்புமற்ற பொதுமக்கள் எழுச்சி அங்கு காணப்படுவதாகும். இது போராட்டத்தின் விஷேட நிலையாகும். எனினும் ஹமாஸ், 48ம் ஆண்டுப் பிராந்திய இயக்கத் தலைமை, P.L.O என்பவற்றின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை.
எது எவ்வாறிருந்த போதும் பலஸ்தீனியர்கள் தியாகிகள். உயிருள்ள மக்கள். முழு முஸ்லிம் சமூகமுமே ஒரு வகைப் புறக்கணிப்பு நிலையில் இருக்கும் போதும் அவர்கள் போராடுகிறார்கள்.
மிகக் குறைந்த வசதிகளோடும், அவர்களில் ஒரு கணிசமான தொகையினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த போதும் அவர்கள் போராடுகிறார்கள். உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித பூமியையும், பள்ளியையும் காக்க அவர்கள் உயிர்களையே தியாகம் செய்து போராடுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதவுவானாக. அருள் புரிவானாக. வெற்றியைக் கொடுப்பானாக.
அவர்களுக்காக நாம் பிரார்த்தனையாவது செய்வோமா?