மக்கா ஒரு பாதுகாப்பான நகரம். ஆனால்…
மக்கா ஒரு பாதுகாப்பான பிரதேசம் என்பது அல்குர்ஆன் விளக்கும் ஒரு உண்மை. இப்றாஹீம் (அலை) அவர்களே முதலில் அதனைப் பாதுகாப்பான நகரமாக ஆக்குமாறு கேட்டார்கள் எனவும் அல் குர்ஆன் விளக்குகிறது. இதனை விளங்க கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்களை நோக்குவோம்.
இப்றாஹீம் “எனது இரட்சகனே இந்த நகரை பாதுகாப்பான நகராக்கி விடு…” என்று கூறியமையை நினைவு கூறுவராக.
(ஸூரா பகரா 2: 126)
இந்த பின்னணியில் மக்கா இஸ்லாமியக் காலத்திற்கு முன்னரும் பாதுகாப்பான ஒரு நகராகி இருந்தது.
அல்குர்ஆன் கூறுகிறது:
அவர்களுக்கு நாம் பாதுகாப்பானதொரு புனித பிரதேசத்தை ஆக்கியுள்ளோம். அதனை சூழ இருக்கும் மக்களோ கவர்ந்து செல்லப்படுகிறார்கள். இதனை அவர்கள் அவதானிக்கவில்லையா?
(ஸூரா அன்கபூத் 29: 67)
இந்த பின்னணியில் மக்காவின் உள்ளே நுழைபவர் பாதுகாப்புப் பெற்றவராகிறார் எனவும் அல்குர்ஆன் கூறுகிறது.
யார் அங்கு நுழைகிறாரோ அவர் பாதுகாப்புப் பெறுகிறார்.
(ஸூரா ஆலஇம்ரான் 3: 97)
அல்குர்ஆனின் இன்னும் பல வசனங்கள் இக் கருத்தை விளக்குகின்றன. இத்தகைய வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும். என்பதை அறிய இங்கு நாம் இஸ்லாத்தின் அடிப்படை உண்மையொன்றை மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் இந்த பௌதீக உலகு இறைவன் அமைத்து வைத்துள்ள பௌதீக விதிகளுக்கும், சட்டங்களுக்கும் ஏற்பவே இயங்குகிறது. மனித வாழ்வு என்பதுவும் மனிதனின் சுதந்திர நாட்டத்தின் ஊடாகவே இயங்குகிறது என்பதாகும்.
அல்குர்ஆனின் நூற்றுக்கணக்கான வசனங்கள் இந்த உண்மையை விளக்குகின்றன. மழை பொழிதல், தாவரங்கள், மிருகங்கள், மனிதர்களின் தோற்றம், அவர்களது பௌதீக உடல் நிகழ்வுகள், நட்சத்திரங்கள், கோள்களின் இயக்கம் இவை எல்லாம் இந்த உண்மையைக் காட்டுபவை. இவற்றை சுட்டிக் காட்டி ஆராயுமாறு வேண்டும் வசனங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
மனிதர்கள் இறைவனை ஏற்று வாழலாம், நிராகரிப்பாளர்களாக வாழலாம். நன்மைகள் செய்யலாம், தீமைகள் செய்யலாம் இவ்வாறு அவர்கள் தமது சுதந்திர நாட்டத்துடன் வாழ அல்லாஹ் விட்டுள்ளான். இதனை விளக்கும் அல்குர்ஆன் வசனங்களும் ஏராளம்.
இந்த உண்மைகளுக்கு மாற்றமாக பௌதீக விதிகளுக்கு அப்பாற்பட்டு அற்புதங்கள் நிகழ்வது விதிவிலக்கு. அது ஆங்காங்கே சிலதான் நிகழும். அற்புதங்கள் பௌதீக உலகை இயக்குவதுவுமில்லை. மனித வாழ்வை இயக்குவதுவுமில்லை.
இந்த வகையில் மக்காவும் அற்புதங்கள் நிகழும் நகரல்ல. உலகின் எல்லா நகரங்களும் இயங்குவது போன்றுதான் அதுவும் இயங்கும். ஆனால் ஒரு முக்கிய அம்சம். அது ஒரு புனித நகரம். அந்த வகையில் அதற்கு இன்னொரு ஒழுங்கையும் அல்லாஹ் நிர்ணயித்தான். அது பாதுகாப்பான நகரம் யுத்தங்கள், இரத்தம் சிந்தல் அங்கு நிகழக் கூடாது. பௌதீக அழிவுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட நகரம் என அது கூறவில்லை. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஸூரா அன்கபூத் 67ம் வசனம் இதனை நன்கு தெளிவுபடுத்துகிறது. சூழ உள்ள மக்கள் பாதுகாப்பற்று கவர்ந்து செல்லப் படும் நிலையில் மக்கா பாதுகாப்பாக உள்ளது என்று அவ் வசனம் சொல்கிறது. ஸூரா குறைஷின் இறுதி வசனமும் இக் கருத்தைக் கீழ்வருமாறு கூறுகிறது.
“அவன் பயத்தை நீக்கிப் பாதுகாப்பை அளித்தான்”
இங்கு பயம் என்பது யுத்த பயம். உயிர், சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்ற பயத்தையே குறிப்பிடுகிறது.
இறை தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைக்க முன்னால் ஒரு பெரு வெள்ளத்தால் கஃபா பலமாக பாதிக்கப்பட அதனை உடைத்து விட்டு அரபிகள் மீளக் கட்டினார்கள் என்பதுவும், இறை தூதர் (ஸல்) அவர்கள் அதில் பங்கு கொண்டார்கள் என்பதுவும் ஆதாரபூர்வமான வரலாற்று நிகழ்வு.
(பார்க்க: அல்ரஹீக் அல் மக்தூம் பக்கம்: 79)
இது பௌதீக அழிவால் கஃபா பாதிக்கப்பட முடியும் என்பதைக் காட்டுகிறது. எனவே பாதுகாப்பு என்பது மனிதனின் அழிவு வேலைகளிலிருந்து பாதுகாப்புப் பெறலையே குறிக்கிறது.
“யார் அங்கு நுழைகிறாரோ அவர் பாதுகாப்புப் பெறுகிறார்” (3:97)
என்ற ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வசனம் மனிதனைக் குறிப்பதை அவதானிக்க.
அடுத்த முக்கிய அம்சம் என்னவெனில் யுத்தம், மனிதனின் அழிவு செயல்கள் என்பவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறல் என்பதுவும் மனிதனிடமே விடப்படுகிறது. அதாவது ஹரம் என்ற புனித பிரதேசத்தில் யுத்தம், இரத்தம் சிந்தல் போன்ற வேலைகளில் மனிதன் ஈடுபடக் கூடாது என்பது இறை சட்டமாகும். இப்றாஹீம் (அலை) அவர்களது காலத்திலிருந்து இது பின்பற்றப்பட்டு வரும் சட்டமாகவும், பாரம்பரியமாகவும் உள்ளது. ஆனால் இது மனிதனின் கையிலேயே விடப் பட்டுள்ளது. மனிதன் இதனை மீறி நடக்கவும் முடியும். ஆனால் மிகப் பெரும்பாலும் இது பின்பற்றப்பட்டே வந்துள்ளது.
இக் கருத்தை விளக்கும் கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தை நோக்குக:
“மஸ்ஜிதுல் ஹராமின் எல்லையினுள்ளே அவர்கள் உங்களுடன் போராடாத வரை நீங்களும் அவர்களுடன் போராட வேண்டாம். அவர்கள் உங்களோடு போராடினால் நீங்களும் போராடுங்கள்.
(ஸூரா பகரா 191)
இந்த வசனம் ஹரம் புனிதப் பகுதியில் யுத்தம் நடக்கலாம். அப்படி ஒரு நிலை வந்தால் முஸ்லிம்களும் போராட அனுமதிக்கப் படுகிறார்கள் என விளக்குகிறது. எனவே ஹரம் புனித பிரதேசம், பாதுகாப்பான பிரதேசம் என்ற நிலை மனிதனிடமே விடப் பட்டுள்ளது என்பது தெளிவு.
வரலாற்றில் கஃபாவின் புனிதத்துவத்தை மதிக்காது அப்பிரதேசத்தில் நிகழ்வுகள் நடந்துள்ளமை மிகவும் தெளிவு.
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இறை தூதர் (ஸல்) அவர்களும், அவரது தோழர்களும் கொடுமைப் படுத்தப்பட்டார்கள். கஃபாவின் உள்ளே இறை தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) மக்காவையும் அதனைச் சூழ இருந்த பிரதேசங்களையும் 9 வருடங்கள் ஆண்டார். இறுதியில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவருக்கு எதிராக மக்காவின் உள்ளேயே போராடி கஃபாவின் மீது கூடப் பாதிப்பை ஏற்படுத்தினான். அப்பாஸிய ஆட்சியின் இறுதி காலப் பிரிவில் கராமிதா என்ற பிரிவினர் போராடி கஃபாவைத் தாக்கினார்கள்.
இந்தப் பின்னணியில் கஃபாவும் அது சார்ந்த இடமும் பாதுகாப்பானது என்ற கருத்தை அது மனித நடத்தைக்கு விடப் பட்டுள்ள சட்டம் என்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹஜ் காலப்பிரிவில் நடக்கும் அனர்த்தங்களையும் இவ்வாறுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் மனிதர்களை சுதந்திரமாக இயங்க விட்டுள்ளான். அப் பகுதிகளில் அவன் தவறுகள் விட்டால் அதற்கு அவனே பொறுப்புதாரனாவான்.
இவ் வருட ஹஜ்ஜின் போது நிகழ்ந்த இரு துக்ககரமான சம்பவங்களை இவ்வாறுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
UPDATE: 29/09/2015
ஹஜ்ஜின் அனர்த்தங்கள் குறித்து…
ஹஜ்ஜின்போது நடந்த அனர்த்தங்களைப் பற்றி எழுதியமை ஒரு சுமுகமான கலந்துரையாடலாகப் போயிருக்க வேண்டும். ஆனால் அது சர்ச்சைக்கைக்குரியதாக மாறியமை குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். எழுதிய கட்டுரையை மட்டும் நோக்காது எழுதுபவரின் எண்ணங்களையும் நோக்க முயல்வது மிகவும் அபாயகரமானது.
நான் இஃவானுமல்ல, ஷீயாவுமல்ல, எந்த சிந்தனை முகாமைச் சேர்ந்தவனுமல்ல என்று என்னை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
நான் எழுதிய கட்டுரை அரசியல் சார்பு வடிவம் எடுப்பதை நான் விரும்பவில்லை. அதனால் பலர் சர்ச்சைப் படுவதையும் விரும்பவில்லை. எனவே அக்கட்டுரையின் அப்பகுதியை நீக்கிவிடுகிறேன்.
அத்தோடு நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு மக்கா என்ற புனித நகரின் பாதுகாப்பு என்பது அற்புதமாக நிகழ்வதில்லை. அது மனிதனின் கையிலேயே விடப்பட்டுள்ளது என்பதையும் கவனத்திற்கொள்க.