முஸ்லிம் சமூக வரலாற்று ஓட்டமும், அதனை நெறிப்படுத்தலும்

 

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 3 கட்டங்களைக் கொண்டது எனப் பொதுவாகக் கூறலாம்:

1) கி.பி 8ம் நூற்றாண்டளவில் இலங்கையில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து (முஸ்லிம் குடியேற்றம் அதற்கு முற்பட்டிருக்கவும் சாத்தியமுண்டு என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.) ஐரோப்பிய படையெடுப்பு துவங்கியது வரையிலான காலப்பிரிவு.

இக் காலப்பிரிவில் முஸ்லிம்கள் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் என்று அறியமுடிகிறது. இந்த நாட்டில் வாழ்ந்த அடுத்த இன மத மக்களோடு சுமூகமாகவும், நல்லுறவாடியும் இக் காலப் பிரிவில் வாழ்ந்தார்கள் என்பது தெளிவு.

2) ஐரோப்பியர் ஆட்சிக் காலப் பிரிவு

இக் காலப்பிரிவு முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் சாபக் கேடாக அமைந்தது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலப் பிரிவுகளில் முஸ்லிம்கள் பெரும் அழிவுகளுக்கு உட்பட்டார்கள். மிகப் பாரிய உயிர்ச்சேதம், சொத்தழிவுக்கு உட்பட்டார்கள். தாம் ஏற்கனவே கட்டி வாழ்ந்த பிரதேசங்களை விட்டு வெளியேறி புதிய இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இது அவர்களை மிகப் பாரிய பின்னடைவுக்கு உட்படுத்தியது.

ஆங்கிலேயர் காலத்தில் ஓரளவு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழும் நிலை ஏற்பட்டாலும் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையால் மிகவும் பாதிப்புற்றார்கள். பெரும்பான்மை சமூகத்தோடு சுமுகமாக வாழ்ந்த நிலைமாறி மோதல் நிலை படிப்படியாக உருவாகியது. 1915ம் ஆண்டுக் கலவரம் இதன் உச்ச கட்டமாகும்.

எவ்வாறாயினும் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வந்த போது முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் வாழ்வு போன்ற எல்லா பகுதிகளிலும் பின்தங்கியவர்களாகவே காணப்பட்டனர்.

3) மறுமலர்ச்சி காலப் பிரிவு

19ம் நூற்றாண்டின் இறுதி காலப்பிரிவுகளில் முஸ்லிம் சமூகத்தில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. எம்.சி சித்திலெப்பையின் (1838-1898) வழிநடாத்தலின் கீழ் ஒரு சிறிய குழு இந்த மறுமலர்ச்சிக்கு சமூகத்தை இட்டுச் சென்றது.

மேல் நாட்டுக் கல்வியில் முஸ்லிம்களை ஈடுபடச் செய்வதன் ஊடாகவே அவர்களை பலம் பெற்றவர்களாக மாற்றலாம் எனக் கண்ட இக் குழுவினர் அப் பகுதியில் விழிப்புணர்ச்சி ஊட்ட பத்திரிகை நடாத்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல், முஸ்லிம்களுக்கு மத்தியில் உரைகள் நிகழ்த்தல், வெளிநாடுகளில் இருந்து வந்த அராபி பாஷா போன்றவர்களை பயன்படுத்திக் கொள்ளல் என்ற பல்வேறு உத்திகளைக் கையாண்டனர்.

ஏறத்தாழ இதே காலப்பிரிவில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் போன்ற மார்க்க ஆலிம்களினுடாக மார்க்கம் பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்க மத்ரஸா கல்வி முறை தோற்றம் பெறலாயிற்று.

முஸ்லிம்களுக்கு மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சி மிகக் குறைவு. எனினும் அரசியல் ரீதியான உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த அதே குழுவினர் அரசியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அது முஸ்லிம் சமூகத்தில் படிப்படியாக அரசியல் தலைமைத்துவத்தையும் உருவாக்கியது.

முஸ்லிம் சமூகத்தில் அடுத்து ஏற்பட்ட முக்கியமானதொரு நிகழ்வே இஸ்லாமிய உலகில் தோன்றிய இஸ்லாமிய இயக்கங்களின் வருகைகளாகும். அவை இஸ்லாம் ஒரு சம்பூரணமான வாழ்வமைப்பு என்ற கருத்தை அழுத்தி விளக்கின. இது முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றுவதன் ஆர்வத்தையும், வேகத்தையும் ஏற்படுத்தியது.

வரலாற்றின் இவ்வாறான பல்வேறு சக்திகளின் செயற்பாட்டின் ஊடாக வளர்ச்சி கண்ட முஸ்லிம் சமூகம் இப்போது கீழ்வரும் நிலைகளுக்கு வந்துள்ளது.

  1. எல்லாப் பகுதிகளையும் இஸ்லாமிய மயப் படுத்தல் பற்றிப் பேசல்.
  2. இணக்க அரசியலில் மட்டுமே குவிந்திருந்த எமது செயற்பாடு இடையில் அஷ்ரபோடு போராட்ட அரசியலுக்கு செல்ல முனைந்து மீண்டும் பின்னோக்கி இணக்க அரசியலுக்கே வந்துள்ளமையும், அரசியல் செயற்பாடு இஸ்லாமிய ரீதியாக நோக்கப் பட வேண்டும் என்ற கருத்து உருவாகி உள்ளமையும்.
  3. இஸ்லாமிய துறைசார்ந்தோரின் தலைமைத்துவம் பற்றிப் பேசல்.
  4. மேற்கத்திய கல்வியைப் படித்தோரது செல்வாக்கும், செயற்பாடும்.
  5. மத்ரஸாக்கள் பல்கிப் பெருகியுள்ளமை.

இந்த ஐந்து அம்சங்கள் பற்றியும் மிகவும் கவனமான ஆய்வுக்கு நாம் வர வேண்டும். அதன் ஊடாக எமது வரலாற்று ஓட்டத்தை நாம் நெறிப்படுத்தல் மிக அவசியம். ஏனெனில் வந்த இதே ஓட்டத்தில் வரலாறு ஓடுவது பொருத்தமாக இருக்காது என்பதோடு அபாயமாகவும் அது அமையும்.

வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் முஸ்லிம்கள் வரலாற்றில் பலமுறை அழிவுற்றார்கள். தமது இடங்களை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டார்கள். 1915ன் பின்னர் 1976 முதல் துவங்கிய முஸ்லிம் சிங்கள இன மோதல்கள் இதுவரை 30க்கு மேல் நடந்துள்ளன. தமிழர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இன மோதல்கள் பாரியளவு நடந்தமையையும் அவதானிக்க முடிகிறது.

இந்தப் பின்னணியிலேயே எமது வரலாற்று ஓட்டம் குறித்து ஒரு மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கூறினோம். நிகழ்கால சிந்தனைகளும், நடத்தைகளும் நிறுவனக் கட்டமைப்புகளுமே எதிர்கால வரலாற்று ஓட்டத்தைத் தீர்மாணிக்கின்றன என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

Reply