இறை கருணையும், மனித செயலும்.

அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: இறை தூதர் (ஸல்) கூறினார்கள்: ‘‘உங்களில் யாரையும் அவரது செயல் காப்பாற்றாது.” அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே உங்களையுமா?” அப்போது இறை தூதர் (ஸல்) கூறினார்கள்: “என்னையும்தான். அல்லாஹ் தனது கருணையை எம்மீது சொரிந்தாலன்றி!” இறை தூதர் (ஸல்) தொடர்ந்து கூறினார்கள்:
“மிகச் சரியாக செய்ய முயற்சியுங்கள். அண்மித்துவாருங்கள். காலையில் புறப்படுங்கள். மாலையிலும் பிரயாணம் செய்யுங்கள். இரவில் கொஞ்ச நேரம் பிரயாணியுங்கள்.
நடுநிலையைக் கடைப்பிடியுங்கள். நடுநிலையைக் கடைப்பிடியுங்கள். போய் அடைந்துவிடுவீர்கள்.”
(ஸஹீஹ் அல்-புகாரி – பத்ஹ் அல்பாரி: பா-11 பக்-332, கிதாப் அல்-ரிகாக்: அத்-184 ஹதீஸ் இலக்கம் 6463)

மனித வாழ்வு, மனித செயற்பாடு குறித்த சில அடிப்படை உண்மைகளை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் யார்? தோல்வியடைந்து தண்டனையின் உலகிற்கு –நரகுக்குச் செல்லாமல் தப்பித்துக் கொள்பவர்கள் யார்? எவ்வாறு அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற உண்மையை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

செயல்களின் மூலமே சுவர்க்கத்தை அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை:

“அந்த சுவர்க்கம் அதற்கு உங்களை நாம் நீங்கள் செயற்பட்டு வந்தீர்கள் என்பதற்காக வாரிசுகளாக ஆக்கினோம்.” (ஸூரா ஜுக்ருப் – 43:73)

“உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். நீங்கள் செய்த செயல்களின் காரணமாக சுவர்க்கத்தில் நுழையுங்கள்.” (ஸூரா நஹ்ல் 16:32)

செயல்களின் மூலமே சுவர்க்கத்தை அடையமுடியும் என்ற இக்கருத்தை இந்த ஹதீஸின் இறுதிப் பகுதியும் சொல்கிறது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
எனினும் மனித செயல்களில் காணப்படும் குறைபாடுகள்தான் எத்தனை எத்தனை?!

தொழுகையை விட்டுவிடாது, நேரம் தவறாது காலமெல்லாம் தொழ முடிகிறதா? அந்தத் தொழுகையின் உயிரோட்டத்தை முழுமையாகப் பேண முடிகிறதா? ஸகாத், ஸதகா என்ற தர்மங்களின்போது பூரண மனத் தூய்மையுடன் நிறைவேற்ற முடிகிறதா?
நோன்பை அந்த ஒரு மாத காலமும் முழு மனப் பக்குவத்துடனும் நிறைவேற்ற முடிகிறதா?
கணவன், மனைவி தொடர்பில் எத்தனை தவறுகள்! குறைபாடுகள்! பொறுப்பற்ற நடத்தைகள்.
பிள்ளை வளர்ப்பில் தாயும், தந்தையும் விடும் பிழைகள் எத்தனை?
ஒரு இளைஞன் தனது இளமைக் காலத்தை தூய்மையுடன் கழிப்பது எவ்வளவு தூரம்…?!
செய்யும் தொழிலில் எத்தனை தவறுகள், பிழைகள், குறைபாடுகள்.
நான் ஒரு பாடசாலையின், கல்வி நிறுவனத்தின், தஃவா நிறுவனத்தின் அதிபர், பணிப்பளர் – எனது பணியில் மிகப் பூரணமாக ஈடுபட்டுவிட முடிகிறதா?
நான் ஒரு ஆசிரியன் பாடத்தை சரியாகவும், பூரணமாகவும் முடிக்கிறேனா? மாணவர்களைப் பயிற்றுவிப்பதில் எவ்வளவு தூரம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளேன்?!
நான் வியாபாரி எனது இத்தொழிலை செவ்வனே சிறப்பாக நிறைவேற்றுகிறேனா?
நான் ஒரு அமைச்சர், பாராளுமன்ற அங்கத்தவர். மக்கள் பிரதிநிதி. மக்களுக்கான கடமைகளை நிறைவு செய்வதில் நான் எவ்வளவு வெற்றி பெறுகிறேன்?!

இவ்வாறு நோக்கினால் தவறுகள், குறைபாடுகளிலிருந்து முழுமையாக விடுபடல் சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.

எனவே, சுவர்க்கத்தில் நுழைய நரகத்திலிருந்து காப்பாற்றப்பட அடிப்படைக் காரணம் இறை கருணை.
நன்மைகள் தீமைகளை விட அதிகமாக இருக்க வேண்டும். இதுவே சுவர்க்கம் நுழைவதற்கான ஷரத்து. 50 புள்ளிகளைத் தாண்ட வேண்டும் என்பது இதன் பொருள். இந்நிலையில் வெற்றிக்கான புள்ளியை யாரும் பெறாதிருக்க முடியும். சிலர் அதனை அண்மித்திருப்பர். சிலர் தூர இருப்பர். இப்போது இறை கருணை உதாரணமக 20 புள்ளிகளை மேலதிகமாக இட்டு நிரப்பி சித்தியடையச் செய்துவிட முடியும். (1)

அத்தோடு சுவர்க்கம் என்பதன் பொருள் கற்பனையிலும் காணமுடியாத இன்பங்கள், எல்லையற்ற நிரந்தர வாழ்வு இந்த நிலைக்கு மனிதன் தனது செயல்களினால் மட்டும் தகுதி பெற முடியுமா? ஒரு போதும் முடியாது என்பது தெளிவு. எனவே, இறை கருணையே சுவர்க்க வாழ்வு என்பதில் சந்தேகமில்லை.

இறை தூதர் (ஸல்) அவர்களது நிலைமையும் இவ்வாறுதான் என்கிறது ஹதீஸ். தூய்மையின் அதி உன்னத நிலையில் வாழ்ந்த இறை தூதர் (ஸல்) அவர்களது நிலையை எப்படிப் புரிந்து கொள்வது.

நுபுவ்வத் – இறைதூதுத்துவம் – என்பது அதி உன்னத அருள். அது சம்பாதித்துப் பெற்றதல்ல. அது ஒரு தெரிவு.

அந்த அதி உன்னத அருளின் முன்னே இறைதூதர் (ஸல்) அவர்களது செயல்களும் கூடப் பாரம் குறைந்துவிடுகின்றன.(2)

மனித வாழ்வின் இந்த அடிப்படை உண்மையை விளக்கிய இறை தூதர்(ஸல்) அவர்கள் இப்போது எமது செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென்பதை மிகவும் அழகாக விளக்குகிறார்கள். அது மனிதன் பற்றிய ஆழ்ந்த புரிதலின் விளைவு என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இறையருளால்தான் சுவர்க்கம் செல்லாம் எனும்போது அது செயல்களின் முக்கியத்துவத்தைக் குறைக்காது என்பதனையும் இறை தூதர் (ஸல்) அவர்கள் அடுத்து செயல்கள் பற்றி விளக்குவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
“மிகச் சரியாகச் செய்ய முயற்சியுங்கள்.”
செயல்களை அவற்றின் முழுமையான வடிவிலும், உண்மையான மன நிலையோடும் செய்ய வேண்டும். இந்த முயற்சி முதலில் அவசியம். ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கிப் பிரயாணப்படுவதாயின் அந்த இலக்கு நோக்கி முழுமையான வேகத்துடன் புறப்படத் துவங்கிவிட வேண்டும். இலக்கு நோக்கி நிற்றல் பிழையாகிவிடக் கூடாது. முடியுமானளவு வேகமும் வேண்டும்.

“அண்மித்து வாருங்கள்…”
புறப்பட்டு விட்டால் இலக்கை நூறு வீதம் அடைந்துவிட வேண்டும்தான். எனினும் இலக்குக்கு அண்மையிலாவது வந்துவிட வெண்டும்.
இலக்கைக் குறிபார்த்துச் சுடுகிறோம். இலக்கை அது தாக்கிவிட வெண்டும். முடியாது போனால் அண்மித்தாவது வந்து விழ வேண்டும்.

இது மனிதனைப் புரிந்து சொன்ன வசனம். மனிதன் பலவீனங்கள் நிறைந்தவன். சராசரி மனிதர்களே மனிதர்களில் பெருந்தொகையினர். எனவே அவர்களிடம் நூறு வீதம் எதிர்பார்க்க முடியாது. எனவே இலட்சிய வாழ்வை அவர்கள் அண்மித்துவிடட்டும் போதும் என்கிறார்கள் இறை தூதர் (ஸல்) அவர்கள்.

அதி உயர் சித்தியடைய – A புள்ளிபெற முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அடுத்த நிலைக்காவது – B சித்திக்காவது வந்துவிட முடியும்.

எவ்வாறு உழைப்பது என்பதை இறை தூதர் பிரயாணத்திற்கு ஒப்பிட்டு விளக்குகிறார்கள்.

“காலையில் புறப்படுங்கள்: மாலையிலும் பிரயாணம் செய்யுங்கள்…”

காலை நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வெண்டும். மாலையிலும் பிரயாணம் செய்ய வேண்டும். நடுப் பகலில் ஒரு ஓய்வு.(3) இரவில் கொஞ்ச நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஓரளவு நீண்ட நேர ஓய்வு. இப்படி அமைய வேண்டும் உழைப்பு.

உள்ளத்தில் தோன்றும் உற்சாக நிலை, வேகமான கருத்து நிலை தீவிர நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது. எனவேதான் இறுதியாக இறை தூதர்(ஸல்) அவர்கள்:

“நடு நிலையைக் கடைப்பிடியுங்கள்” என இரண்டு முறை கூறி “போய் அடைந்து விடுவீர்கள்” என்கிறார்கள்.

மார்க்கம் பற்றிய மிக அடிப்படை உண்மை இதுதான்:

மிகச் சரியாகச் செய்ய முயற்சித்தல்…
அண்மித்து வருதல்…
நடுநிலைச் செயற்பாடு…தீவிரமற்ற நிலை

கடுமையான உழைப்பு, பாதையில் சீராக நிற்றல் இலக்கை அடைய அதி முக்கியமானது. இப்போதுதான் இலக்குக்கு அண்மையில் செல்ல முடியும். தொழுகையின் முழு வடிவையும் விளங்கி அதன் 65-75% இலக்கையாவது அடைந்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் மார்க்கத்தை பின்பற்றுவதிலோ செயற்படுத்துவதிலோ தீவிரப் போக்குக் கூடாது. இறை தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “…ஆனால் நான் தொழுகிறேன், தூங்குகிறேன், நோன்பு பிடிக்கிறேன் நோன்பை விடுகிறேன், திருமணம் முடிக்கிறேன். இந்த எனது வழிமுறையைவிட்டு யார் விலகுகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்ல.” (ஸஹீஹ் முஸ்லிம் – கிதாப் அல் நிகாஹ். ஹதீஸ் இலக்கம் 1401)

நாம் வாழும் இக்காலப்பிரிவு குறிப்பாகத் தீவிரப் போக்குக்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற காலப்பிரிவு. சிறுபான்மையாக வாழும் எமது வாழ்வுநிலை எந்தவகையிலும் அதற்கு இடமளிக்காது. நேரெதிர் விளைவுகளையே அது கொடுக்கும்.


(1,2) கலாநிதி ஷரப் மஹ்மூத் அல் குளாத் அல் ஹத் – அல் நபவி-பீ-அல்-ரகாயிக் பக்:142,143
(3) மேற்படி நூல் பக்: 144
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி – பத்ஹ்-அல்பாரி வா:11 பக்:335

Reply